தமிழக பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இணைந்திருப்பது இளைஞர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. அண்ணாமலைக்கு கட்சி அமைப்பு விதிமுறைகளை மீறி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை. சில நேரங்களில் பாஜக கட்சி அமைப்பு விதிகளில் விலக்குகள் உண்டு. அந்த அடிப்படையில் அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 
இதற்கு முன்பு பாஜக உறுப்பினராகக்கூட அல்லாதவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்ற வரலாறும் உண்டு. சுரேஷ் பிரபு, ஜெய்சங்கர் போன்றோர் கட்சியில் சேர்ந்தவுடனே பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. பாஜகவில் நீண்ட காலமாக உழைத்துக்கொண்டிருந்தாலும், திறமையுள்ளவர்கள் கட்சி வரும்போது அவர்களுக்கு அங்கீகாரத்தை பாஜக கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும். புதிதாக கட்சிக்கு வருவோரிடமும் இந்த நம்பிக்கை ஏற்படும்.” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “அதிகாரத்துக்கு வர நினைத்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கினால் அதை பாஜக வரவேற்கும். அவர் விரைவில் அரசியலுக்கு வரட்டும். தமிழக அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும். அவர் வந்த பிறகு யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.