கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மூலம் அவதூறு செய்த விவகாரம் பூதாகரமாகியது. இந்த விவகாரத்தை பாஜகவும் இந்து அமைப்புகளும் கையில் எடுத்து போராட்டத்தில் குதித்தன. இதனையடுத்து கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பாஜகவும் பல்வேறுவிதமான போராட்டங்களையும் வேண்டுதல் நிகழ்வுகளையும் நடத்திவருகிறது. அந்த வகையில் வீடுகள் தோறும் வேல் பூஜையை தமிழகம் முழுவதும் இன்று மாலை பாஜக நடத்தியது.


வீடுதோறும் இந்தப் பூஜையை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி பாஜகவினர் தங்கள் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்கவிட்டனர். பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் வேல் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “பாஜகவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள்.  பிரதமர் மோடி ஆட்சியால் கவரப்பட்டு இவர்கள் பாஜகவுக்கு வருகிறார்கள்.

 
கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என இன்னும் விசாரிக்கப்படவில்லை. கறுப்பர் கூட்டத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. இதில் அவருடைய நிலைப்பாடு என்ன?” என முருகன் கேள்வி எழுப்பினார்.