முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இவர்களது சந்திப்பு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதாக இருந்தாலும் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் எல்.முருகன் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை பாஜக நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். தடையை மீறி யாத்திரை நடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் துணை முதல்வர் ஆகிய இருவரையும்  பாஜக தலைவர் சந்திதுருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

 பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து துணை முதலமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “முதல்வர் துணை முதல்வர் ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரில் சந்தித்தேன். இருவருக்கும் எனது வாழ்த்து தெரிவித்தேன். வேல் யாத்திரை மற்றும் அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை” எனக் கூறினார்.