தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் முன்னுக்குப் பின்னாகப் பேசிவருகிறது. முதல்வர் வேட்பாளரை எங்க கட்சி தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காத கட்சிகள் கூட்டணியை விட்டு செல்லலாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அதிரடியாகத் தெரிவித்தார்.


ஆனாலும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக இன்னும் தெளிவாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூட்டணி குறித்து பேசியுள்ளார். “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும். அது நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும். தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. எங்களுக்கு முழு ஆதரவை அவர்கள் வழங்கி தருகிறார்கள். 
அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டனர். அதில் எந்தக் குழப்பமும் இல்லை. பீகாரில் பாஜகவுக்கு அதிக வேட்பாளர்கள் இருந்தாலும்கூட நிதிஷ்மார்தான் முதல்வர் வேட்பாளர் என அமித்ஷா தெரிவித்தார். பீகார் போல தமிழகத்திலும் உரிய நேரத்தில் நாங்கள் முடிவு எடுப்போம். அந்த முடிவில் உறுதியாக இருப்போம்” என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.