தமிழக அரசியலரங்கில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் போய்க் கொண்டிருந்தாலும் கூட, தி.மு.க. கூட்டணியை மையமாக வைத்து ஒரு முக்கிய பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அது, ’விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றிட முயற்சிகள் நடக்கிறது!’ என்பதுதான். இப்படியொரு காரியத்தை செய்வது தி.மு.க.தான்! ஏனென்றால் கருணாநிதி இல்லாத தி.மு.க.வுக்கு திருமாவளவனை சுத்தமாக பிடிக்கவில்லை, ஆனால் அவர் வலியுறுத்தி கேட்டதால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொண்டார்கள், இரண்டு தொகுதிகளை ஒதுக்கி வெற்றிக்கும் வித்திட்டார்கள். ஆனால் அதன் பின் வழக்கம்போல் ஸ்டாலினும், திருமாவும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பல விதங்களில் இரு தரப்புக்கும் இடையில் உரசல்கள். அதனால் எதிர்வரும் தேர்தல்களில் திருமாவை கூட்டணியில் வைத்திருக்கவிரும்பவில்லை! 

மேலும், பா.ம.க.வின் சீற்றம் தி.மு.க. மீது அதிகமாக இருக்க காரணமே சிறுத்தைகள் இங்கிருப்பதுதான். அவர்களை கழட்டிவிட்டாச்சு என்றால் ராமதாஸ் அமைதியாகிடுவார்!  என்று ஸ்டாலினுக்கு நம்பதகுந்த தகவல். எனவேதான் திருமாவை தள்ளிவிட பார்க்கிறார் வெளியே!....என்று பொதுவான பேச்சு இருக்கிறது. ஆனால் இன்னொரு தரப்போ ‘இல்லை. ஸ்டாலினுக்கும், திருமாவுக்கும் இடையில் பெரிதாய் எந்த சிக்கலுமில்லை. கூட்டணி முறியுமளவுக்கெல்லாம் அவர்கள் முறைத்துக் கொள்ளவில்லை. எல்லா கூட்டணிக்குள்ளும் இருக்கும் யதார்த்தமான கருத்து வேறுபாடுகள்தான் இங்கேயும் இருக்கிறது. ஆனால், இதை பெரிதாக ஊதி, அதன் மூலம் குழப்பத்தை உருவாக்கி, விடுதலை சிறுத்தைகளை வெளியே தள்ளிட, எதிரணியிலிருந்து ஒரு முயற்சி நடக்கிறது.” என்கிறார்கள். 

இப்படி பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் பற்றிப் பேசியிருக்கும் வி.சி.க.வின் செய்தித்தொடர்பாளரான வன்னியரசு “சதி திட்டம் நடக்கிறது தமிழக அரசியலில். கடந்த 2006-லிருந்து நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம் (அப்ப 2011-ல் மக்கள் நல கூட்டணியில் கும்மியடிச்சது வேற வி.சி.க.வாண்ணே?) . இதற்கு காரணம், தமிழகம் மற்றும் தேசிய அளவில் சமூக நீதிக்காக இயங்கும் ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். சமூக நீதி, இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதோடு, மதவாதம், சாதியவாதத்திற்கு எதிராகவும் தி.மு.க. எப்போதும் இருக்கிறது.  பா.ஜ.க.வுக்கு எதிராக துடியாக நின்று, அதன் சதிராட்டத்தை வீழ்த்தியதில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழகம்தான்.  வலுவான தி.மு.க. கூட்டணியால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

எனவே இக்கூட்டணியை உடைக்க துடிக்கிறது பா.ஜ.க. மாநில கட்சிகளை பலவீனப்படுத்தி, அங்கே தங்களின் ஆட்சியை நிலை நிறுத்துவதுதான் பா.ஜ.க.வின் சதித்திட்டம். இதற்காக தி.மு.க. கூட்டணிக்குள் பலமாக இருக்கும் கட்சிகளை வெளியேற்றும் வேலையை உளவுத்துறை மூலமாக செய்து வருகிறது. இந்த சதியை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதால் கூட்டணிக்குள் குழப்பம் வர வாய்ப்பே இல்லை.” என்றிருக்கிறார். 
ஓஹோ!