தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜக என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பேசி வரும் சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால், பாஜகவே உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற கருத்தை பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். சமூக வளைத்தளங்களில் திமுகவினரும் பாஜகவினரும் தொடர்ந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் திமுக அரசு மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால், பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சி என்று அக்கட்சியினர் பேசி வருகிறார்கள். இந்நிலையில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பது போல பிரசாரம் செய்யும் பாஜகவை அம்பலப்படுத்துங்கள் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பதிலடி கொடுத்தனர். இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் வரிசையாக பொன்னையனை திட்டித் தீர்த்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் பொன்னையன் வைத்த விமர்சனங்களைப் போலவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக தலைமையகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என்ற மாயை பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி. ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து அதிமுக விலகாது.

திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் விதமாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாஜக மூக்கை நுழைக்கக் கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது. ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வர முழு அதிகாரம் உள்ளது. அப்படி இருந்தும் குழு அமைத்திருப்பது தேவையில்லாதது. தடை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கும் ஒரு நடவடிக்கை ஆகும்.” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.