முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாஜக அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், எப்படியாவது இரண்டு இலக்க தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில், பாஜக தலைமை உறுதியாக உள்ளது. இதற்காக வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பிரபலமானவர்களை கட்சியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. எல்.முருகன் மாநில தலைவரான பிறகு இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளன. 

இந்த நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இனி இவர் கட்சி தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தொலைக்காட்சிகளிலும் இவர் பங்கேற்பார் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுதவிர, கட்சி தொண்டர்கள் இடையே உரையாற்றி, அவர்களை ஊக்குவிக்கவும், அண்ணாமலையை பயன்படுத்த பாஜக திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்கவும் கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் பழைய தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும் புதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் எப்போது டெல்லி வந்தாலும், ஏதாவது ஒரு வி.ஐ.பி.யை கட்சியில் சேர்க்க வருகிறார் என டெல்லி பாஜக தலைவர்கள் சந்தோஷப்படுகின்றனர். எல்.முருகன் மீண்டும் டெல்லி செல்ல உள்ளதால், இந்த முறை அதிமுகவை புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான் பாஜகவில் இணைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.