ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்த எதிர்க்கட்சிக்கு அனுமதி அளித்து விட்டு, பாஜகவின் அறவழி போராட்டத்திற்கு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்;- தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவோரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவன், அவருக்கு ஆதரவு தரும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை தமிழக தாய்மார்கள் நடமாட விட மாட்டார்கள் என்று தான் கூறினேன் என்றும் விளக்கமளித்தார். 

மத்திய அரசை குறை சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களுக்கும், பெண்களைக் கொச்சைபடுத்தும் விதத்தில் பேசுவோரையும் பாதுகாக்கும் நடவடிக்கையை தான் மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.  சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற தயார்ப்படுத்தும் பணிகள் தற்போது இருந்தே தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் பலமாக அமையும்" என்றார்.