BJP is keen to rule shortcut Modi government will be removed - who said

மதுரை

பா.ஜனதா குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது. மோடி அரசு அகற்றப்பட வேண்டும் என்று காங்கிரசு மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். 

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரசு கட்சி செயல் வீரர்கள் கூட்டம் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். 

இதில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "காமராசர் பிறந்த நாள் அன்று 50 இலட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 

ஜெயலலிதா இறந்துபோனதால் அ.தி.மு.க. கட்சி உடைந்து போனது. தமிழகத்தில் தி.மு.க.விற்கு அடுத்து காங்கிரசு இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தேர்தலில்தான் எல்லாம் தெரியும். கட்சி ஆரம்பித்து முதல்வராகாவிடில் கட்சி காலியாகிவிடும். 

அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டும்தான். மோடி அரசு அகற்றப்பட வேண்டும்.

இந்தியாவில் 3-வது மற்றும் 4-வது அணி கிடையாது. அணி உருவானாலும் நிலைக்காது. ஆட்சிக்கு வராது. மோடியை வீழத்த காங்கிரசு கட்சியால்தான் முடியும். 

தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் ஒன்றாக இருக்கிறோம். தேர்தலின்போது இன்னும் பல கட்சிகள் வரும். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் வரும். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியால்தான் அந்த மாற்றத்தை தர முடியும். 

பா.ஜனதா குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது. பா.ஜனதாவுக்கு பயந்து கிடக்கும் ஊழல் ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். 

தமிழகத்தில் காமராசர் ஆட்சி எதிர் காலத்தில் வரவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் மோடி தூக்கி எறியப்படுவார். ராகுல்காந்தி பிரதமராக வருவார்" என்று அவர் பேசினார்.