‘’மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற எங்களுக்கு போதிய பலம் உள்ளது,’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

உடல்நலக் குறைவால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். அவருக்குப் பதிலாக, ராகுல் காந்தி காங்கிரசின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனது பணியை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 18) முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்ற சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு ஆக்கப்பூர்வமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது, தெலுங்கு தேசம் உள்ளிட்ட மற்ற கட்சிகள், மாநில பிரச்னைகளை எழுப்பி, அவையை இயங்க விடாமல் முடக்கின. 

முதல் நாள் கூட்டத்தொடர் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்த நிலையில், வரும் நாட்களில் கூட்டத்தொடர் அமைதியாக நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. அமைதியாக அவை நடைபெற்றால் மட்டுமே எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

எனினும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் வசம் போதிய உறுப்பினர்கள் இல்லை என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சதி பலிக்காது என்றும் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். 

இதுபற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சோனியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், ‘’நாடாளுமன்றத்தில் எங்களுக்குப் போதிய பலம் இல்லை என்று யார் சொன்னார்கள். எங்கள் வசம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர். திட்டமிட்டபடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவோம்,’’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறுமா, இல்லையா என்பது பற்றி வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தெரிந்துவிடும்…