’அம்மா வழிகாட்டுதல் படி நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி!- தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அமைச்சரவையினர் கிஞ்சிற்றும் தயக்கமில்லாமல் உதிர்க்கும் வாக்கியம் இது. இனி இந்த வார்த்தையை பயன்படுத்துவதாய் இருந்தால் பி.ஜே.பி. முன் மண்டியிடக்கூடாது! என்று எடப்பாடியார் மற்றும் ஓ.பி.எஸ். இருவரை நோக்கியும் உயர்வான கட்டளை குரலை கிளப்பியுள்ளனர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். 

உற்று கவனித்தால் ஒரு உண்மை நிலை புரியும், கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வின் தலைமை பீடத்தினுள் ஒரு பதற்றம் நிலவி வருகிறது. ’நீங்கள் உத்தரவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டு, கழக பணியாற்ற தயார்’ என்று பன்னீர்செல்வம் பொங்கியதன் பின்னணியே இந்த பதற்றம்தான். அதற்கடுத்த இரண்டு நாட்களிலேயே ‘அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது!’ என்று ஒரு பரபரப்பு தீயை எடப்பாடியார் தரப்பு பற்றவைத்துவிட காரணமும் இந்த பதற்றம்தான். ஆனால் இந்த பதற்றத்தை உருவாக்கியது பி.ஜே.பி.! என்பதுதான் விவகாரமே. 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வின் லகானை கையிலெடுத்திட பி.ஜே.பி. முயன்றது வெளிப்படையான செயல். ஆனால் திராவிடயிஸம் ஊறிப்போன இந்த மண்ணில் ஜஸ்ட் லைக் தட் அது நடந்திட முடியாது என்பதை ஒரு சில நாட்களிலேயே புரிந்து கொண்டது. அதனால்தான் சசிகலாவின் வைரியான பன்னீருக்கு ஆதரவு கொடுத்து அ.தி.மு.க.வினுள் ஊடுருவியது டெல்லி ஆதிக்கம். 

பன்னீர் தர்மயுத்தம் நடத்தியது, பின் எடப்பாடியாருடன் கைகோர்த்து துணைமுதல்வர் ஆனது எல்லாமே டெல்லியின் அஸைன்மெண்ட்ஸ்தான் என்பார்கள். பன்னீர் பெரியளவில் தங்களுக்கு பயன்படுவார் என்று நம்பிய அமித்ஷாவுக்கு ஒரு கட்டத்தில் அந்த நம்பிக்கை அறுந்து போனது. இதற்கு காரணம் இயல்பாகவே எடப்பாடியாரின் செல்வாக்கு தமிழகத்தில் மெதுவாக துளிர்விட துவங்கியதுதான். இதனால் அமைச்சர்களின் போக்கிலும் பி.ஜே.பி. மீது ஒரு பயமில்லாமல் போனது. சில அமைச்சர்கள் ‘நாங்கள் டெல்லியின் அடிமை இல்லை’ என்று வெளிப்படையாக உரசிப்பார்த்தனர். இதன் பிறகுதான் ரெய்டு மேளாவை நடத்தி, லகானை இறுகப்பற்றியது பி.ஜே.பி. 

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடந்த ரெய்டு ஒட்டு மொத்த அமைச்சரவைக்கும் ‘எங்களிடம் ஒழுங்கா நடந்து கொள்ளுங்கள்’ எனும் எச்சரிக்கை மணியே. இதன் பின் அமைச்சரவையும், அ.தி.மு.க.வின் முக்கிய மையங்களும் கப்சிப்  ஆகின. அதிலும் பன்னீர் தரப்பு ரொம்பவே அடக்கி வாசித்தது. ஆனாலும் தாங்கள் கொடுத்த அஸைன்மெண்டுகளை நிறைவேற்றவில்லை எனும் கடுப்பில் பன்னீரை ஓவராக உரசியது டெல்லி. ராணுவ அமைச்சர் நிர்மலாசீதாரமன் அவரை சந்திக்க அனுமதி மறுத்ததெல்லாம் அதன் ஒரு நிலையே என்கிறார்கள். இதற்கு பன்னீர்செல்வத்தின் ரியாக்‌ஷனெல்லாம் யானையை பார்த்து எறும்பு முறைத்த மாதிரிதான். அவ்வளவே!

எடப்பாடியார் ஆதரவு தரப்பினுள் மத்தியரசு ரெய்டு சூறாவளியை பாய்ச்சும் போது பன்னீர் தரப்பு மகிழ்வதும், பன்னீரை டெல்லி அலையவிடும்போது எடப்பாடியார் தரப்பினர் சிரிப்பதுமாகத்தான் சூழல் போய் கொண்டிருக்கிறதே தவிர இருவரும் சேர்ந்து, துணிந்து டெல்லியை எதிர்த்து நிற்கும் சூழலே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் எந்த தரப்பு டெல்லியை முறைத்தாலும் ரெய்டு நடக்கும்! என்கிற பொதுவான அச்சமே. 

இதர்கிடையில் ஜெயலலிதா இறந்த பின் தமிழகத்தில் இருந்து பி.ஜே.பி. அரசுக்கு எதிராக மக்கள் காட்டும் எந்த ரியாக்‌ஷனிலும் தமிழக அரசின் ஆதரவு இல்லை. நீட்  தேர்வில் துவங்கி 8 வழிச்சாலை வரை டெல்லி என்ன சொல்கிறதோ அதை வார்த்தை மாறாமல் திருப்பி ஒப்புவிப்பதே மாநிலத்தை ஆளும் நபர்களின் ஒரே கடமையாக இருக்கிறது. இந்த சூழல் அ.தி.மு.க. மீது மிக மிக மோசமான சித்திரத்தை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளன. ஆளும் கட்சி மீது மிக கடுமையான அதிருப்தியை மக்கள் மனதில் தோற்றுவித்துமுள்ளது. இனி எந்த தேர்தல் நடந்தாலும் அடியோடு அ.தி.மு.க. சாய்க்கப்படும் சூழலே இப்போதைக்கு இருப்பதாக கழக சீனியர்களே நாடி பிடித்து சொல்லியிருக்கின்றனர். 

இந்த நிலை அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கி ஆதங்கப்பட வைத்துள்ளது. இதன் வெளிப்பாடே கடந்த சில நாட்களாக அமைச்சர்களை நோக்கி ’பி.ஜே.பி.க்கு ஒத்து ஊதாதீர்கள். உங்கள் சொத்தை காப்பாற்றிக் கொள்ள ரெய்டுக்கு பயந்து, கழக மானத்தை அடமானம் வைக்காதீர்கள். எதிர்க்கும் நேரத்தில் எதிர்க்காவிட்டால் மக்கள் நம்மை துடைத்து தூற தூக்கிவீசி விடுவார்கள். ஜாக்கிரதை!’ என்று நெருக்கடி மேல் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். இது கழகத்தின் இரு ஒருங்கிணைப்பாளர்களையும் ஓவராய் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. 

இது ஒருபுறமிருக்க கடந்த சில நாட்களாக தி.மு.க. பக்கமும் ஓவர் கரிசனத்தை காட்ட துவங்கியுள்ளது பி.ஜே.பி. எனும் பேச்சுக்களும் கிளம்ப துவங்கியுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் முழு அதிருப்தியில் இருக்கும் நிலையில் கூட்டணி வைத்தால் எந்த நன்மையும் நடக்க போவதில்லை! என்று அமித்ஷா ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல். அதனால்தான் தி.மு.க.வின் திசை நோக்கி தாமரை பார்க்க துவங்கியுள்ளதாம். 

இந்த சூழலும் அ.தி.மு.க. சீனியர் தலைகளை கடுப்பேற்றி இருக்கிறது. இத்தனை நாட்களாக இவர்களுக்கு பின்னணி வாசித்ததால்தானே மக்களை பகைத்துக் கொண்டோம். இப்போது இவர்களே கூட்டணி இல்லை என்றால்,  தேர்தலில் வாஷ் அவுட் ஆவதை தவிர வேறு வழியே இல்லையே! என்று புலம்பிக் கொட்டுகிறார்கள். இதன் வெளிப்பாடே ‘அழகிரி பேரணியன்று, ரெய்டை நடத்த வேண்டியதன் அவசியமென்ன? ஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்கிறதா டெல்லி?’ என்று தம்பிதுரையே தாறுமாறாக ஆதங்கம் காட்டிய நிலை எழுந்திருக்கிறது.  

அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த சூழலும் ஒப்பேறும் வகையில் இல்லை! என்பதை கவனித்துவிட்டுதான் கடைசி கட்ட முயற்சியாக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர் இரண்டாம் நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும். ‘அமைச்சரவையை சேர்ந்த பத்து பதினைந்து பேரின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக மொத்த கழகத்தையும் அடமானம் வைத்து மண்டியிட வேண்டுமா?’ என்பதே அவர்களின் கேள்வி. 

பதில் கூற வேண்டியவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்?