கேம்பஸ் ஃப்ரண்ட் தலைவர்களை சட்ட விரோதமாக  உ.பி மாநில காவல் துறை கைது செய்துள்ளதாக கூறி  மாணவர் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் மற்றும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் அதிகுர் ரஹ்மான், மசூத் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் குடும்பத்தினரை சந்திக்க இந்த குழுவினர் ஹத்ராஸுக்கு சென்று கொண்டிருந்தனர். யோகி அரசாங்கத்தின் கீழ் உ.பி.யில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க நினைப்பது கூட இப்போது ஒரு குற்றமாக கருதப்படுகிறது என்பதை இந்த சட்டவிரோத கைது காட்டுகிறது. உ.பி.யில் தோல்வியுற்ற சட்டம்-ஒழுங்கு நிலைமையை மூடி மறைக்க பாஜக அரசு நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தொடர்புப் படுத்த முயல்கிறது.  

சதி கோட்பாட்டை உருவாக்குவதன் மூலம் உ.பி. காவல்துறை பிரச்சினையின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. உ.பி. மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மக்களிடையே அதிகரித்து வரும் கோபத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அவர்களின் பதற்றத்தையே இத்தகைய செயல்கள் காட்டுகின்றன. உ.பி. அரசாங்கத்தின் அடக்குமுறை போன்ற தந்திரங்களால் பாப்புலர் ஃப்ரண்டை அச்சுறுத்த முடியாது. கேம்பஸ் ஃப்ரண்ட் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் ஆகியோரை  உடனடியாக விடுவிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.