பாஜகவினர் நடத்தவுள்ள வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத பாஜகவினர் தமிழகத்தில் வேல்யாத்திரை நடத்த தடை விதிக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நவம்பர் 6-ம் தேதி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது இதுபோன்ற அரசியல் ஊர்வலம் நடத்தினால், தமிழக அரசின் மிகக் கண்டிப்பான உத்தரவான சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைய வழிவகுக்கும்.

பாஜக நடத்திய ரத யாத்திரையால் ரத்தக் களரியே ஏற்பட்டதை நினைவுக்கூர வேண்டும். தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத, தமிழ்க் கடவுள் முருகன் பெயரையே வைத்துக் கொள்ளாத, தமிழை, தமிழகத்தை, தமிழ்ப் பண்பாட்டையே அழிக்க முனைந்துள்ள பாஜகவினர், நவம்பர் 6-ம் தேதி நடத்தவிருக்கும் வேல் யாத்திரையில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே, இந்த வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.