நாளை மறுநாள் வாக்குப்பதிவு. முழுமையாக வாக்குப்பதிவு முடியும் வரை, கவனமாக இருக்க வேண்டும். கையூட்டைத் தடுக்க வேண்டும். ஆகவே, வாக்குப்பதிவு நடைபெறும் வரை நாம் ஒவ்வொருவரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய இருக்கிறோம். மிகப்பெரிய அனுபவத்தை அறுவடை செய்ய இருக்கிறோம். ஏகடியம் பேசியவர்களுக்கு ஏராளமான அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், தமிழக பாஜகவின் கட்சி பத்திரிகையான ‘ஒரே நாடு’வில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தது. தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வெறும் 24 மணி நேர அவகாசம் தந்தது. மாற்று கட்சியினருக்கு தொல்லை தருவதற்காக ஆளும் கட்சியினர் செய்யும் ஆதிகால தந்திரத்தை மீண்டும் அமல்படுத்தியது திமுக. மற்ற கட்சிகள் கூட்டணி பற்றிய எந்த இறுதி முடிவும் எடுக்காத நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஆளும் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் தனித்து போட்டியிடுகிறோம் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டவுடன், மலையளவு பணி இருக்கிறதே என்று மலைத்துப் போகாமல், இமயமலை அளவு தன்னம்பிக்கையுடன், இதயத்தில் உரம் இருக்கிறது என்று கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் ஒத்துழைப்பு நல்கி களப்பணி செய்த, கட்சி நிர்வாகிகளுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் மீது இருந்த தன்னம்பிக்கையால், நான் எடுத்த இந்த முடிவை பதட்டமில்லாமல், மிகக் குறைந்த காலகட்டத்தில், தமிழகம் முழுக்க வேட்பாளர்களை களம் இறக்கிய இந்த உள்ளாட்சித் தேர்தல், நம் உள்ளத்தின் உறுதியை அதிகரித்த உற்சாகமான தேர்தல்.

வெற்றியை நோக்கிய நம் பயணத்தில், நம் தனித்துவ பங்களிப்பை பதிவு செய்ய ஒரு உன்னதமான தருணத்தை உருவாக்கிய வேளையில், நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பெரிய இலக்கை எண்ணிப் பெருமூச்சு விடாமல், பெரிதினும் பெரிது கேட்ட பெருமையுடன், போட்டி போட்டுக்கொண்டு செய்த வேலைகள், இதுவரை நாம் கண்டிராத உணர்ச்சிமிகு தருணங்கள். ஆகவே உங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றி உங்கள் அனைவரின் உற்சாகத்திற்கும், பங்களிப்பிற்கும் என் மனப்பூர்வமான நன்றியை காணிக்கையாக்குகிறேன். சரி, நிறைவடைந்தது பிரச்சாரம். ஆனால், நம் வேலையோ பணியோ கடமையோ நிறைவடையவில்லை. இனிமேல்தான் நமக்கு ஏராளமான பணிகள் காத்துக்கொண்டிருக்கிறது. 

பிரச்சாரம் முடிந்தவுடன் நாம் ஓய்வெடுக்க முடியாது. சாய்ந்து இருக்க முடியாது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு. முழுமையாக வாக்குப்பதிவு முடியும் வரை, கவனமாக இருக்க வேண்டும். கையூட்டைத் தடுக்க வேண்டும். ஆகவே, வாக்குப்பதிவு நடைபெறும் வரை நாம் ஒவ்வொருவரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அனைவரையும் வாக்குப்பதிவு செய்ய வைக்க வேண்டியது அவசியம். அதிக வாக்குப்பதிவு நடைபெற்றால்தான், தெளிவான மக்கள் ஆதரவைப் பெற முடியும். ஆகவே, ஒவ்வொருவரும் உங்கள் பூத்திலே கவனம் செலுத்துங்கள். அனைத்து பகுதியிலும், வாக்காளர்களின் இல்லம் சென்று, அவர்கள் உள்ளம் வென்று, அவர்களின் வாக்குகளை தாமரை சின்னத்துக்கு தகுதி பெறச் செய்யுங்கள். 

நான் எந்த இடத்தில் இருந்தாலும் என் கண்கள் எல்லாம் உங்களை சுற்றித்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். நீங்கள் எப்படி வாக்குச்சாவடிக்கு வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை கவனித்துக் கொண்டிருக்கும். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒளிமயமான வருங்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய இருக்கிறோம்.

மிகப்பெரிய அனுபவத்தை அறுவடை செய்ய இருக்கிறோம். ஏகடியம் பேசியவர்களுக்கு ஏராளமான அதிர்ச்சி காத்திருக்கிறது. வரும் 19-ஆம் தேதி அறுவடை நாள். அதுவரை செய்த பணியால் சோர்ந்துவிடாமல், கண்ணுறங்காமல் கருத்துடன் அதிகமான வாக்குப்பதிவை தாமரைக்கு பெற்றுத் தாருங்கள். உண்மையான உங்கள் உழைப்பிற்கு உத்தரவாதம் வரப்போகிறது என்ற நல்ல செய்தியுடன் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அண்ணாமலை அதில் எழுதியுள்ளார்.