Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளின் எதிர்காலத்தை பாழடிக்கிற முயற்சியில் பாஜக அரசு... மத்திய அரசை கடுமையாக சாடும் கே.எஸ்.அழகிரி..!

 ஒரே நாடு ஒரே சந்தை என்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

BJP government is trying to ruin the future of the farmers...ks alagiri
Author
Tamil Nadu, First Published Jun 8, 2020, 12:15 PM IST

ஒரே நாடு ஒரே சந்தை என்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில்;- மத்திய பாஜக அரசு சமீபத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட மூன்று அவசர சட்டங்களை கொண்டுவந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சில பொருட்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

BJP government is trying to ruin the future of the farmers...ks alagiri

அதேபோல விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை களைவதாக கூறி 'வேளாண் உற்பத்தி பொருட்கள், வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் - 2020, விவசாயிகளின் சுரண்டலை தடுக்க விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் - 2020' கொண்டு வரப்பட்டுள்ளது.

வேளாண் சந்தை தொடர்பான விவகாரங்களில் மாநில அரசுகள் சீர்திருத்தம் கொண்டுவர தவறிய காரணத்தால் இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்ததாக மத்திய பாஜக அரசு கூறுகிறது. இதன் மூலமாக வேளாண் சந்தைகள் தொடர்பான மாநில அரசுகளின் சட்டத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைத்ததாக பாஜக அரசு புதிய விளக்கம் கூறுகிறது. இந்த சட்டம் கொண்டு வந்ததன் மூலம் விளைபொருட்களுக்கான விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த அவசர சட்டங்கள் கொண்டு வரப்படுவது குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநில அரசுகளிடமும் நரேந்திர மோடி அரசு கலந்து பேசவில்லை. கருத்தை கேட்கவில்லை.

BJP government is trying to ruin the future of the farmers...ks alagiri

இந்திய அரசமைப்பு சட்டத்தில் மாநில அரசின் பட்டியலில் உள்ள விவசாயம் சம்பந்தமான முக்கியமான பிரச்சினைகளில் மத்திய அரசு தன்னிச்சையாக அவசரம் சட்டம் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன? கொரோனா பாதிப்பினால் நாடே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய அவசர சட்டங்களை கொண்டு வந்தது ஏன்? இந்த நேரத்தில் எதிர்ப்பை நீர்த்துப்போக செய்யலாம் என்ற நோக்கத்தில் இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டதா? இதைவிட கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கிற நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது. மாநில உரிமைகளை அப்பட்டமாக பறித்து ஒரே நாடு ஒரே சந்தை என்கிற திட்டத்தை செயலுக்குக் கொண்டு வருகிற முயற்சியை இதுவரை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை. இதில் தமிழக அரசு மௌனம் காப்பதில் உள்ள மர்மம் என்ன?

ஆனால், விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிற பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசின் அவசர சட்டத்தை கடுமையாக எதிர்த்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறார். அவர் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் மண்டலத்தை அகற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தமது மாநிலத்தில் உள்ள விவசாய கட்டமைப்பை மத்திய அரசு தகர்க்க முயல்வதாக கூறி தமது கண்டனத்தை பதிவுசெய்திருக்கிறார். தமிழக முதல்வருக்கு இத்தகைய துணிவு வராதது ஏன்?

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற ஒற்றையாட்சி நடைமுறையை கையாண்டு வருகிற பாஜக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைப்பதற்காக ஒரே நாடு ஒரே சந்தை என்கிற முறையை அமல்படுத்த அவசர சட்டம் இயற்றியுள்ளது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கிற விவசாயத்தை பறிக்க முயல்வது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதில் தலையிட்டு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. விவசாயத்துறையை மாநில அரசுகளால் மட்டுமே திறம்பட கையாள முடியும்.

ஒரே நாடு ஒரே சந்தையின் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் விற்பனை செய்ய வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் தங்களுடைய விளைபொருளை அறுவடை முடிந்த உடனேயே அருகில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கோ அல்லது தாங்கள் விரும்பும் வியாபாரியிடமோ எடுத்துச்சென்று சந்தை விலைக்கு விற்கவே செய்வார்கள்.

இந்நிலையில், நீண்டகாலம் சேமிக்க முடியாத தங்களது விளைபொருள்களை வெளிமாநில வியாபாரிகளுக்கு விற்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.மொத்த மக்கள்தொகையில் 53 சதவீதம் பங்கு வகிக்கின்ற விவசாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 17.5 சதவீதம் தான். இதற்கு காரணம் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதன் காரணமாக கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

BJP government is trying to ruin the future of the farmers...ks alagiri

75 சதவீத விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்த விலையே கிடைக்கிறது. இதில் விவசாயிகளுக்கு இழைக்கப்படுகிற அநீதியை போக்குவதற்கு இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஒரே நாடு ஒரே சந்தை மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசால் வழங்க முடியுமா? விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து பாதுகாக்கப்படுமா?

வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு சட்டம் சரியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதில் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்திருக்கின்றன. பெரும்பாலான சந்தைகளில் வியாபாரிகளின் ரகசிய ஒப்பந்தத்தின் காரணமாக விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. இதை களைவதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்த முயற்சிகள் என்ன?

கடந்த 2018 ஆம் ஆண்டு 585 மின்னணு முறையிலான விவசாய சந்தைகளை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் இடைத்தரகர்கள் பலனடைவது தடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது. ஏற்றுமதியாளர்களுக்கோ, சில்லறை வியாபாரிகளுக்கோ விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருளை விரும்பிய விலையில் விற்க முடியும் என்றும் கூறப்பட்டது.

BJP government is trying to ruin the future of the farmers...ks alagiri

ஆனால் நடைமுறையில் விவசாயிகளுக்கோ, நுகர்வோர்களுக்கோ எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. இதை மூடிமறைப்பதற்குதான் ஒரே நாடு ஒரே சந்தை கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, ஒரே நாடு ஒரே சந்தை என்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற நடவடிக்கையாகும். அதே நேரத்தில் விவசாயிகளின் எதிர்காலத்தை பாழடிக்கிற முயற்சியாக கருதி தமிழ்நாடு காங்கிரஸ் இதை கடுமையாக எதிர்க்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios