கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் பகுதியை சேர்ந்த பாஜக மாநில பொது செயலாளர் கே எல் நரேந்திரனின் கார்  திருட்டு போனதாக ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பெயரில் காரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு, காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் கார் செல்லும் பாதையை கண்காணிக்க ஏதுவாக இருந்தது. 

இந்நிலையில் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் முழு கண்காணிப்பில் காரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் வாக்கி டாக்கி மூலம் சிங்காரப்பேட்டை காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர்.அதன் அடிப்படையில், சிங்காரப்பேட்டை கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான வெள்ளகுட்டை பகுதியில் காவல்துறையினர் பேரிகார்டு அமைத்து காரை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது கார் நிற்காமல் திரும்பி சென்றது.அப்போது எதிர் திசையில் வந்த காவல் துறையினர் மடக்கியதால்,  வழிதெரியாமல் இடையே உள்ள தீர்த்தகிரி வலசை ஏரியில் உள்ள கரையின் மீது கார் வேகமாக சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேரில் 2 பேரை காவல் துறையினர் மடக்கிப்பிடித்தனர், ஒருவர் தப்பிவிட்டார். இதைதொடர்ந்து இருவரை சிங்காரப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.