மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியை அவருடைய பிறந்த நாளில் நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று கொண்டாடிவருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளையும் வழங்கிவருகிறார்கள். கருணாநிதியின் நினைவிடத்துக்கு திமுக தலைவர்களும் அக்கட்சி தொண்டர்களும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். ட்விட்டரில், நவீன ‘தமிழகத்தின் தந்தை’ என்ற வாசகத்தை ஹாஷ்டேக் மூலம் திமுகவினர் டிரெண்ட் ஆக்கினார்கள்.
 இதேபோல கருணாநிதி பிறந்த நாளையொட்டி பிற அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் அவரை நினைவுகூர்ந்து தங்கள் பதிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான காய்த்ரி ரகுராம், கருணாநிதியை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை அவருடைய பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவருடைய புத்திசாலித்தனமான வார்த்தைகளாலும் பேச்சுகளாலும் அவர் சிறந்து விளங்கினார். அவருடைய கருத்துகளையும் பேச்சுகளையும் மக்கள் உள்வாங்கினார்கள். இன்று திமுகவில் அவரைப் போல யாரும் இல்லை. அவரைப் போல பேச திமுகவில் யாரும் இல்லை. அவருடைய இடத்தை திமுகவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பது உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

 
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அதிமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் ஆகியோருடன் சேர்ந்து பாஜகவினரும் ‘ஊழலின் தந்தை’ என்ற வாசகத்தை ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கினார்கள். அதோடு கருணாநிதியை விமர்சித்தும் கருத்திட்டுவருகிறார்கள். ஆனால், பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.