திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தர பாஜக கும்பல் தயார்... கொளுத்திப் போட்ட வேல்முருகன்..!
திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தரக்கூட பாஜக கும்பல் தயாராக உள்ளது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற திருமாவளவன் பிறந்த நாள் விழாவில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் தமிழக வாழ்வுரிமைக கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு நல்ல தலைவரை பெற்றிருக்கிறார்கள். எங்கு பேசினாலும் எப்படி பேச வேண்டும் என்று தெளிவு பெற்ற ஒரு பேராசிரியரைப் போல திருமாவளவன் பேச்சுக்கள் உள்ளன. அம்பேத்கருக்கு பிறகு இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடுபவர் திருமாவளவன்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அல்லாத ஒரு தலைவர் பேசினார் என்றால், அது திருமாவளவன்தான். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகளை அழைத்துவந்து போராட்டம் நடத்தியது திருமாவளவன்தான். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பாலாஜியை அவருடைய கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். திருமாவளவன் அடையாளம் காட்டுகிறார். அத்தொகுதியில் எல்லா சாதி மக்களும் வாக்களிக்கிறார்கள். சமூகநீதி அரசியலுக்குள் வந்து நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
திருமாவளவனை நான் கட்டியணைத்து படம் எடுத்தால் சிலருக்கு எரிகிறது. அதையே ராமதாஸ் செய்தால் வரவேற்பார்கள். வேல்முருகன் செய்தால் எதிர்க்கிறார்கள். திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தரக்கூட பாஜக கும்பல் தயாராக உள்ளது. ஆனால், சங்பரிவார் போன்ற மதவாத அமைப்புகளிடம் திருமாவளவன் ஒருபோதும் அடி பணியமாட்டார். திருமாவளவனோடு சரி சமமாக விவாதிக்கிற அளவுக்கு ஓர் அறிவுஜீவி கூட தமிழக பாஜகவில் இல்லை” என்று வேல்முருகன் பேசினார்.