புதிய கட்சி ஆரம்பிப்பது என்பதை எல்லாம் தாண்டி சட்டப்பேரவை தேர்தலில் ஆதரவு நிலைப்பாடு என்பதோடு நிறுத்திக் கொள்ள ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ரஜினி மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பார் என்றால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்த முறை பெரிய அளவில் யாரும் ரஜினியை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர் சந்திப்பின் போது ரஜினி அரசியல் களத்திற்கு வருவது சந்தேகம் தான் என்பது ஓரளவிற்கு தெரிந்தது. அதோடு மட்டும் அல்லாமல் ரஜினி தனது உடல் நிலை குறித்து கடந்த மாதம் வெளியிட்ட தகவலும் கூட அவர் அரசியல் வருகையை கேள்விக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் தான் மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜினி அழைப்பு விடுத்திருந்தார்.

இப்படி ஒரு அழைப்பு வரும் என்று மாவட்டச் செயலாளர்கள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் தலைமையிடம் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து சிலர் பஸ்ஸை பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர். வந்தவர்களை மிகவும் கெடுபிடி காட்டியே ராகவேந்திரா மண்டபத்திற்குள் அனுமதித்தனர். மாவட்டச் செயலாளர்கள் தவிர வேறு யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 38 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில நிர்வாகிகள் என மொத்தமே 50 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர்கள் அனைவரது செல்போன்களும் ஆப் செய்து வைக்குமாறு கூறப்பட்டது. இதே போல் கூட்டத்தில் நடக்கும் விஷயங்களை எக்காரணம் கொண்டும் யாருக்கும் தெரிவிக்க கூடாது என்று ரஜினி வருவதற்கு முன்னர் மேடையேறி சுதாகர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனையும் மீறி உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ரஜினி பேசியது, நிர்வாகிகள் பேசியது செய்தியாளர்களுக்கு லீக் செய்யப்பட்டது. இந்த லீக், திட்டமிட்டு உள்நோக்கத்துடன் ரஜினி அனுமதியுடன் தான் செய்யப்பட்டது என்பது பிறகு தெரியவந்தது.

கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் வெறும் 20 நிமிடங்கள் தான் ரஜினி பேசியதாக கூறுகிறார்கள். பெரும்பாலும் மாவட்டச் செயலாளர்களை பேசவிட்டு ரஜினி அவர்கள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்ததாக சொல்கிறார்கள். பிறகு மாவட்டச் செயலாளர்களில் சிலரை தனியாக அழைத்து ரஜினி பேசியதாகவும் கூறுகிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல் புதிய கட்சி துவங்கினால் போதும் மற்றதை தாங்கள் பார்த்துக் கொள்வதாக ரஜினியிடம் உறுதி மொழி அளித்துள்ளனர்.

அப்படி என்றால் இதுநாள் வரை எத்தனை உறுப்பினர்களை சேர்த்துள்ளீர்கள், எவ்வளவு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்கிற விவரத்தை ரஜினி கேட்க அந்த விவரத்தையும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் புள்ளி விவரங்களுடன் அடுக்கியுள்ளனர். இருந்தாலும் கூட இது போதாது என்கிற மனநிலையில் தான் ரஜினி பேசியதாக கூறுகிறார்கள். மேலும் புதிய கட்சி ஆரம்பிப்பது என்பதற்கு எல்லாம் சாத்தியம் இல்லை என்கிற தொனியில் ரஜினி பேசியதாகவே கூறுகிறார்கள். ஆனாலும் நிர்வாகிகள் கூறியதை கேட்டு தான் நல்ல முடிவை எடுப்பதாக ரஜினி கூறிவிட்டு சென்றுள்ளார்.

முன்னதாக நிர்வாகிகளிடம் ரஜினி தனது உடல் நிலை குறித்து கூறியுள்ளார். கொரோனா காலத்தில் தேர்தல் பணிகளில் எந்த அளவிற்கு தன்னால் திறம் பட செயல்பட முடியும் என்று தெரியவில்லை, மேலும் தான் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பு காட்டுவதாகவும் கூட ரஜினி தெரிவித்துள்ளார். இதனை எல்லாம் மீறித்தான் தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையே நடத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட நிர்வாகிகள், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் தாங்கள் கட்டுப்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனிடையே அரசியல் கட்சி முடிவை ரஜினி எப்போதே மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவும் தற்போது மாவட்டச் செயலாளர்களை அழைத்து 2021 சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து பேசியதாகவும் மட்டுமே கூறுகிறார்கள். குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற மனநிலை ரஜினிக்கு உள்ளதாகவும் அதனை ஒட்டியே அவர் நிர்வாகிகளிடம் சில கேள்விகளை கேட்டதாகவும் சொல்கிறார்கள். அதே போல் பாஜகவிற்கு எதிர்காலத்தில் உதவும் வகையில் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ளும் தொனியும் ரஜினியிடம் தெரிந்ததாக கூறுகிறார்கள்.

எனவே அதிமுக மிகவும் எதிர்பார்த்ததை போல ரஜினி தேர்தலில் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு தான் எடுப்பார் என்றும் அதனை ஒட்டியே அவரது அரசியல் திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தால் அதனை அதிசயம் என்று கூறுவதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை என்று கூறிச் சென்றனர் பெயர் கூற விரும்பாத சில மாவட்டச் செயலாளர்கள்.