BJP failure in last 3 years it have only 272 seats in parliment

மத்தியில் மோடி தலைமையில் பாஜகஅரசு பதவிக்கு வந்த பிறகு, 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 மக்களவைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இவற்றில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாஜக 22 இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.

4 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்,மகாராஷ்டிராவின் பல்ஹாரில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது ஏற்கெனவே பாஜக வசம் இருந்த தொகுதிதான். புதிதாக எந்த தொகுதியிலும் அக்கட்சி வெற்றிபெறவில்லை.

ஆனால், ஏற்கெனவே வெற்றிபெற்றிருந்த பல தொகுதிகளை பாஜக இழந்து விட்டது.மோடி ஆட்சிக்கு வந்த அதே 2014-ஆம் ஆண்டில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த 2 தொகுதிகளையும் பாஜக வென்றது.

2016-ஆம் ஆண்டிலும் 2 தொகுதிகளை பாஜக வென்றது. ஆனால், 2015, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக ஒன்றில் கூட வெற்றிபெற முடியவில்லை.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில்தான் பாஜக-வின் தோல்வி படர ஆரம்பித்தது.இந்த தொகுதி பாஜக மூத்த தலைவர் வினோத் கண்ணாவுக்கு செல்வாக்கான தொகுதி. 4 முறை அவர் வெற்றி பெற்றிருந்தார். கடைசியாக 2014-இல் வெற்றி பெற்றிருந்த அவர் திடீரென மரணம் அடைந்ததால், 2017 அக்டோபர் 11-இல் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜக ஸ்வரன் சலாரியா என்பவரை நிறுத்தி இருந்தது. ஆனால், அவர் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹரிடம்,சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

2018 பிப்ரவரியில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அல்வார் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், இந்த 2 தொகுதிகளையுமே இடைத்தேர்தலில் காங்கிரசிடம் பாஜக பறிகொடுத்தது.

அடுத்து உத்தரப்பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலும் பாஜக-வுக்குஅதிர்ச்சியாகவே அமைந்தது. உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தொடர்ச்சியாக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி கோரக்பூர். இங்கு2014 மக்களவைத் தேர்தலில் 3 லட்சத்து12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய நாத் வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால், 2018 மார்ச்சில் நடந்த இடைத்தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் பாஜகவேட்பாளர் தத் சுக்லா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீண்குமாரிடம் சுமார் 21 ஆயிரத்து 961 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

பூல்பூரிலும் பாஜக வேட்பாளர் கவுசிலேந்திர சிங் படேல், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங்படேலிடம், 59 ஆயிரத்து 613 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

இந்த தொடர் தோல்விகளால் 2014-இல் 282 எம்.பிக்களுடன் ஆட்சிக்கு வந்த பாஜக-வின் பலம் 272 ஆக சரிந்தது. இந்நிலையில்தான் நேற்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜக-வுக்கு எதிராக அமைந்துள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் நூர்பூர் தொகுதியை சமாஜ்வாதி கட்சியிடமும், கைரானாதொகுதியை ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியிடமும் பாஜக இழந்துள்ளது. மகாராஷ்ட்டிரத்தில் பல்ஹார் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போது பெரும்பான்மை பலமான 272 தொகுதிகள் மட்டுமே பாஜக கைவசம் உள்ளது.