சென்னையில் சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் 1000 பேருடன் வந்து கலவரம் செய்வோம் என மிரட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்அவுஸ் பகுதியில் சேபு அபுபக்கர் என்பவர் MSM மலேசியன் பரோட்டா என்ற பாஸ்ஃபுட் உணவகத்தை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த 3 பேர் சிக்கன் ரைஸ் வாங்கி விட்டு காசு கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் தாங்கள் 3 பேரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள். எங்களிடமே பணம் கேட்கிறாயா என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிபோதையில் உள்ள அந்த 3 பேரில் ஒருவர் கடை உரிமையாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஜக நிர்வாகிகளை அங்கிருந்து செல்லுமாறும், எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர்.அதனை கேட்காமல் அந்த நபர், தான் பாஜகவின் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எனறும், நாளை முதல் அபுபக்கர் கடையை எப்படி நடத்துகிறார் என்றும் பார்ப்போம் என மிரட்டும் தொனியில் பேசுகிறார். தன்னுடன் உள்ள இருவர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை தான் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். 

மேலும் அமித்ஷாவின் பிஏவுக்கு போன் செய்வேன் எனவும், 1000 பேர் ரெடியா இருக்காங்க, மதக் கலவரம் பண்ணிடுவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.