தமிழக முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட சிலரின் புகைப்படத்தை அவதூறு பரப்பும் வகையில்  சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகியை  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக- பாஜக இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து வந்தார். இதனையடுத்து 610 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நோட்டிஸ் அனுப்பியருந்தார். மேலும் துபாய் பயணத்தின் போது முதலமைச்சர் அணிந்திருந்த உடையின் விலை குறித்தும் சமூக வலை தளம் மூலம் தவறான தகவல் பரப்பியதாக பாஜக சேலம் மாவட்ட எடப்பாடி பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளர் அருண்பிரசாத் மீது திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சேலம் எடப்பாடி நகர போலீசார் அருண்பிரசாத்தை கைது செய்து கடந்த வாரம் சிறையி்ல் அடைந்தனர். இதனால் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாஜக நிர்வாகி கைது

இந்தநிலையில் கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த முனியப்பனூரை சேர்ந்தவர் விக்னேஷ். பாஜக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட சிலரின் படத்தை அவதூறு பரப்பும் வகையில் சித்தரித்து புகைப்படம் தயார் செய்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த திமுக ஐ.டி விங்க் பொறுப்பாளர் தீபக் சூரியன் என்பவர் இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலைய போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.