திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் திமுகவுக்கு சாதகமாக தமிழக அரசு நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக பாஜகவின் தடா பெரிய சாமி தெரிவித்துள்ளார். 
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக  தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை ஏற்கனவே சென்னையில் நடந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த விசாரணைக்கு எதிராக திமுக தொடர்ந்து வழக்கில், மு.க. ஸ்டாலின் சார்பில் அவருடைய பிரதிநிதி விசாரணையில் பங்கேற்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் டெல்லியில் ஆணையத்தில் விசாரணையில் பங்கேற்க திமுக, பாஜக தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக நிர்வாகி தடா பெரியசாமி பங்கேற்றார். விசாரணைக்கு பிறகு தடா பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசினார். “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற புகாரில் சென்னையில் ஏற்கனவே விசாரணை நடந்தது. அதன் தொடர்ச்சியாக விசாரணை டெல்லியில் நடந்தது. முரசொலி இடம் சம்பந்தமான ஆவணங்களை தமிழக அரசும் வழங்கவில்லை. திமுக தரப்பும் ஒப்படைக்கவில்லை. 'சென்னையில் பஞ்சமி நிலம் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கவில்லை' என தமிழக அரசு கூறுகிறது.


ஆனால், இது உண்மை இல்லை. அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த இன்றைய சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான 1932-ம் ஆண்டு ஆவணங்களை ஆணையத்தில் தந்துள்ளோம். தமிழக அரசு அதிகாரிகள் அதிமுக - திமுக கட்சிகளுக்கு துணை போகிறவர்களாகவே இருக்கிறார்கள். முரசொலி நில விவகாரத்தில் அவர்கள் திமுகவுக்கு சாதகமாக நடக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்று தடா பெரியசாமி தெரிவித்தார்.