குடியுரிமை  திருத்தச் சட்டம் இந்திய குடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.  சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இவ்வாறு கூறியுள்ளார்.  கடந்த 20 ஆண்டு காலமாக பஞ்சாயத்துராஜ்ய சட்டத்தின் நோக்கம்  நிறைவேற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை என்றார்.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தாதது அவளும் எனவும் அவர் கூறினார்.  தமிழகத்தில் குடிநீர் ,  கழிவுநீர் ,  தெரு விளக்கு ,  கால்வாய் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களே தீர்த்துக்கொள்ளும் வகையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கி வருகிறது.

திட்டங்களுக்காக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நம்பியிருக்க தேவையில்லை என்றார், மக்களுக்கான திட்டங்கள்  சரியாக செயல்படாத காரணத்தால் எண்ணற்ற முறைகேடுகள் நடந்து ஊராட்சிகள் என்றாலே ஊழல் காட்சிகள் என்று பெயர் பெற்று விட்டது என்றார்,  தேர்தலை இரண்டு கட்டமாக நடத்தியிருப்பது அவலம் ,  அதுவும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை  இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்து ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி இருக்க வேண்டும் என்றார், அப்போது,  குடியுரிமை சட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதன் அவசியம் என்ன என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு முன்கூட்டியே பரப்புரை செய்திருக்க வேண்டும்.  இந்த சட்டம் குறித்து மக்களுக்கு தெளிவான விழிப்புணர்வு வந்தபிறகே அதை கொண்டுவந்திருக்க வேண்டுமென்றார். 

அப்படி செய்திருந்தால் இந்த அளவிற்கு எதிர்ப்புகள் வந்திருக்காது, இது நாட்டில் குறிப்பிட்ட மக்களை பாதிக்கும் என்ற அச்சத்திலேயே பெரிய அளவில் போராட்டங்கள் வலுத்திருக்காது என்றார் .  அதே வேளையில் இந்த சட்டம் இந்திய குடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை ,  வெளியிலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாகத்தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஆனால் அது சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உறுதி அளிக்க வேண்டும் அதற்கான  பொறுப்புடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றார்.  இந்த சட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றாலும்,  இதற்கு இன்னும் பெரிய அளவில் அரசு விவாதம் நடத்த வேண்டும் என்றார்.