அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்-2021’ சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். “அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமிக்குத் தன்னுடைய ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பேசியிருக்கிறார். அதிமுகவை உடைக்க நானோ திமுகவோ நினைக்கவில்லை. அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்கள். அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.


அதிமுகவின் நான்கு ஆண்டுகால முதல்வராக இருந்தபிறகும் சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ திமுகவோ கருதவில்லை. ‘நான் முதலமைச்சர்’, ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பா.ஜ.க.வே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். பழனிசாமி முதலமைச்சர் என்று பன்னீர்செல்வமே பிரச்சாரம் செய்யவில்லை. இந்த சோகத்தை மறைக்க, இந்த வெட்கத்தை மறைக்க, திமுக மீதும் என் மீதும் பழி போடுகிறார் பழனிசாமி. திமுகவை குடும்பக் கட்சி என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். அரசாங்க கஜானாவிலிருக்கும் பணத்தையெல்லாம் தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் கொள்ளையடித்து மடைமாற்றம் செய்யும் குடும்ப ‘கான்ட்ராக்டர்’தான் பழனிசாமி.
தனது குடும்பத்திற்குச் சொத்து சேர்க்கவே முதல்வர் பதவியையும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும் கடந்த 10 ஆண்டுகாலத்தில் பயன்படுத்தி, தமிழ்நாட்டைப் பாழாக்கிய பகல் கொள்ளைக்காரர்தான் பழனிசாமி. ஏழைகளுக்குக் கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் பழனிசாமி! கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத கல்நெஞ்சக்கார பழனிசாமி எல்லாம் மனிதரா? இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு 2,500 ரூபாய் தரவில்லை; தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அதிமுக நலனுக்காகக் கொடுக்கிறார். அதிமுக டோக்கன் கொடுத்து அவர்தான் மாட்டிக் கொண்டார். வழக்குப் போட்டோம். ஆர்வக் கோளாறாகச் சிலர் கொடுத்துவிட்டார்கள் என்று திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட வெட்கம் கெட்ட அரசுதான் இது!
'சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார்?' என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். சென்னையின் தெருவில் இறங்கிக் கேளுங்கள். அதைவிட்டு பொதுக்கூட்டத்தில் கேட்பதால் என்ன பயன்? சில வாரங்களுக்கு முன்னால் இதே கேள்வியை பழனிசாமி கேட்டார். அதற்கு டிசம்பர் 2-ஆம் தேதி அன்று நடந்த கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் நான் விரிவாகப் பதில் அளித்தேன். அதனைப் புரிந்து கொள்ளும் சக்தி முதலமைச்சருக்கு இல்லையா எனத் தெரியவில்லை. அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார் பழனிசாமி. சென்னையில் பழனிசாமி பயணிக்கும் பாலங்கள் அனைத்தையும் கட்டியது இந்த ஸ்டாலின்தான்! ஒன்றல்ல, ஒன்பது பாலங்களைக் கட்டினேன்! 2006 முதல் உள்ளாட்சித் துறை அமைச்சர், 2009 முதல் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை இந்த ஒரு கூட்டத்திலேயே மொத்தத்தையும் சொல்லி முடிக்க இயலாது.
பழனிசாமியைப் போல டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தவனல்ல நான். அரசாங்க கஜானாவில் உள்ள பெரும்பாலான பணத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய மூன்றுக்கு மட்டுமே ஒதுக்கி பழனிசாமியும், வேலுமணியும் கொள்ளை அடிப்பதற்காக ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறீர்களே அத்தகைய வழக்கம் கொண்டது அல்ல திமுக ஆட்சி. அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் - அனைத்து துறைக்கும் நிதிப்பங்கீடு செய்து - அனைத்து மக்களுக்கும் சரிவிகித நன்மை செய்த அரசு திமுக அரசு. அத்தகைய அரசை நடத்தியவர்தான் கருணாநிதியும் நாங்களும்! தாய்த்தமிழ்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன! நிறைவேற்ற வேண்டிய கனவுகள் அதிகம் உள்ளன! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இக்கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாக அமையும். எல்லார்க்கும் எல்லா கனவுகளும் நிறைவேறும் ஆட்சியாக அமையும்!