தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதற்கேற்ப மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே அவ்வப்போது மோதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.


இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக பொதுசெயலாளர்களில் ஒருவரும், மேற்கு வங்க பாஜக பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்ஜியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு வன்முறை என்ற பேச்சுக்கே இடமில்லை. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், வன்முறை அரசியலுக்கு எதிராக வங்காள மக்கள் எழுந்து நிற்பார்கள்.


மேற்கு வங்காளத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவை எடுக்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். தற்போதைய சூழலில் மேற்கு வங்காளத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த முடியாது. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் மட்டுமே சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்த முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.