டெல்லியில் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் பாஜக அல்லாடிவருகிறது. இதேபோல 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸும் தன் வாக்கு வங்கியை இழந்துவிட்டு தவிக்கிறது.
டெல்லிக்கு 1956-ம் ஆண்டு வரை இரு முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். ஆனால், அதன் பிறகு டெல்லியில் சட்டப்பேரவை இல்லாமல் ஆக்கப்பட்டது. பின்னர் டெல்லிக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, 1993-ம் ஆண்டில் முதன் முறையாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜகவின் சார்பாக மதன்லால் குரானா முதன் முறையாக பதவியேற்றார். ஆனால். ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மதன்லால் குரானாவை தவிர சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் என மூன்று முதல்வர்களை  டெல்லி கண்டது.


இதன்பின்னர் 1998-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஷீலா தீட்சித் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1998-ம் ஆண்டையடுத்து 2003, 2008 ஆகிய ஆண்டுகளிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஷீலா தீட்சித் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.


2013-ம் ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், அந்த ஆட்சி 3 மாதங்களில் கவிழ்ந்தது. பிறகு 2015-ல் நடைபெற்ற தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் அர்விந்த் கெஜ்ரிவாலே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளார்.
பாஜக 1998-ம் ஆண்டில் ஆட்சியை இழந்த பிறகு கடந்த 22 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சிக்கு வர முடியவில்லை. கடந்த முறை கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை எதிர்கொண்ட பாஜக, இந்த முறை முதல்வர் வேட்பாளரைக்கூட அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதேபோல 3 முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் வெல்லவில்லை என்பதைத் தாண்டி 64 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்துள்ளது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ், பாஜக என இரு பெரும் தேசிய கட்சிகளை துடைத்தெறிந்துள்ளது ஆம் ஆத்மி.