bjp could not find candidate for rk nagar by election

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளரே கிடைக்காமல், தமிழக பாஜக தவித்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல், நடந்துவருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே, ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷ் தான் இம்முறையும் போட்டியிடுவார் என திமுக அறிவித்துவிட்டது. 

தனது அணி சார்பில் தானே போட்டியிடப்போவதாக தினகரனும் அறிவித்துவிட்டார். சசிகலா மற்றும் குடும்பத்தினர், தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை என கூறப்பட்டபோதிலும், சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்தார். அதன்பின்னர், தினகரன் தான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில், கடந்த முறை போட்டியிட்ட கலைக்கோட்டுதயம், இந்தமுறையும் போட்டியிடுகிறார். 

இரட்டை இலையை மீட்ட அதிமுக சார்பில், யார் போட்டியிடுகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், இந்தமுறையும் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. மதிமுகவின் நிலைப்பாடு வரும் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

மீதமிருப்பது பாஜகதான். வேட்பாளரை தேர்வு செய்வதற்காக தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தலை புறக்கணிப்பது என தமிழக பாஜக முடிவு செய்தது. ஆனால், தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் இந்த வேளையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை விமர்சித்து பிரசாரம் செய்யலாம் என்பதால் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துவிட்டாராம்.

அதனால், ஆர்.கே.நகரில் வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக பாஜக உள்ளது. ஆனால், போட்டியிட்டாலும் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து அதற்காக செலவு செய்ய விரும்பாததால், கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரனும் கைவிரித்துவிட்டார்.

ஆர்.கே.நகரில் போட்டியிட்டால், கண்டிப்பாக நட்சத்திர வேட்பாளர்தான் போட்டியிடுவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். கங்கை அமரன் கைவிரித்துவிட்ட நிலையில், வேட்பாளர் கிடைக்காமல் பாஜக தவித்து வருகிறது. வேட்பாளரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.