முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’நாளை நடைபெறும் அதிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும்.

ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப்பாஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு.

இதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 1980-ல் மக்களவைத் தேர்தலில் அதிமுக 2 இடங்கள் மட்டுமே பிடித்தது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். பாஜகவைப் பொறுத்தவரை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்தியக் கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநிலக் கட்சிகளோடு அகில இந்திய கட்சிகள் இருக்கும்போது முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்கக்கூடாது என்பதால் அகில இந்தியக் கட்சி அறிவிக்கும். அதனால் பிரச்சினையில்லை.

அழகிரியின் செயல்பாடு மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். அழகிரி தனது கொள்கையிலிருந்து மாறாத நிலைப்பாடு உடையவர். முறையாக திட்டங்களை வகுத்து செயல்படுபவர் அண்ணன் அழகிரி. கலைஞர் கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளது. ஆனால், திமுக அழகிரியைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எதிர்க்கட்சிகளை வளரவிடக் கூடாது என்பதில் கலைஞரைப் போன்று செயல்படுபவர் அழகிரி. எதிர்க்கட்சியாக இருந்தபோது அழகிரியால் நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம். அழகிரியைப் புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும்" என அவர் தெரிவித்தார்.