பிரதமர் நரேந்திர மோடி கடுமையான குற்றச்சாட்டை கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கூறியுள்ளது.
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக - பாஜகவை கடுமையாகத் தாக்கி பேசிய மு.க.ஸ்டாலின், “ஸ்டைர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் பிரதமர் மோடி. அதைச் செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி” என்று பேசினார். ஸ்டாலினின் இந்தப் பேச்சு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.


இந்நிலையில் ஸ்டாலினின் இந்தப் பேச்சு தொடர்பாக பாஜக இளைஞர் அணியான ‘யுவ மோர்ச்சா’ சார்பில் ஸ்டாலின் மீது தமிழ நாடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், “ஸ்டெர்லைட் போராட்டத்தை சிபிஐ விசாரித்துவருகிறது. அந்த வழக்கில் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இப்படி இருக்க ஒட்டப்பிடாரத்தில் பேசிய ஸ்டாலின் துப்பாக்கிச்சூடு நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டதாகப் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
 ஸ்டாலின் பேசியது அப்பட்டமான தவறான தகவல். அவதூறான பேச்சு இது. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல். பிரசாரத்தில் தவறான தகவல்களை ஸ்டாலின் பேசிவருகிறார். எனவே ஸ்டாலின் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாருடன் ஸ்டாலின் பேசிய வீடியோ அடங்கிய பென் டிரைவும் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.