பா.ஜ.க நெருக்கடி காரணமாக புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஓபிஎஸ் ஒதுக்கியதால் எடப்பாடி கடும் கடுப்பில் இருக்கிறாராம்.

பா.ஜ.கவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கம் காட்டியதற்கு பலனாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தனி சின்னத்தில் போட்டியிட கிருஷ்ணசாமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் புதிய தமிழகம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதில்லை என்பதில் துவக்கத்தில் இருந்தே அதிமுக உறுதியாக இருந்துள்ளது.

இதனால் தான் பேச்சுவார்த்தைக்கு கூட அந்த கட்சியை அழைக்கவில்லை. கிருஷ்ணசாமியை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் வாக்குகளை விட கிடைக்காமல் போகும் வாக்குகள் தான் அதிகம் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. இதனால் தான் கிருஷ்ணசாமிக்கு கூட்டணியில் கூட இடம் இல்லை என்று அந்த கட்சி தீர்க்கமான முடிவு எடுத்திருந்தது.

இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் என இருவருமே ஒரே நிலைப்பாட்டில் தான் இருந்துள்ளனர். ஆனால் திடீரென கிருஷ்ணசாமியை அதிமுக அலுவலகம் வரவழைத்து ஒரு தொகுதியை கொடுத்துள்ளார் ஓ.பி.எஸ். வழக்கமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருப்பது வழக்கம். ஆனால் கிருஷ்ணசாமியுடனான ஒப்பந்தத்தின் போது ஓ.பி.எஸ் மட்டுமே இருந்தார்.

இ.பி.எஸ் வர முடியாது என்று கூறிவிட்டார். மேலும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கூட ஓ.பி.எஸ் முகம் கடுகடுவெனத்தான் இருந்தது. இது அத்தனைக்கும் காரணம் பா.ஜ.க தான் என்கிறார்கள். பா.ஜ.கவை தமிழகத்தில் சீண்டுவார் இல்லாத போது முழு அளவில் ஆதரவு கொடுத்து வந்தவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. அமித் ஷாவை மதுரை அழைத்து வந்த விழா எல்லாம் எடுத்தார்.

மேலும் தென் தமிழகத்தில் நாடார்களை தங்கள் வாக்கு வங்கியாக மாற்றிவிட்டதாக பா.ஜ.க நம்புகிறது. தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர்களையும் தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்ற கிருஷ்ணசாமி உதவுவார் என்று நம்புகிறார்கள் பா.ஜ.க மேலிடத்தினர்.

இதன் காரணமாகவே கூட்டணிக்கு வேண்டவே வேண்டாம் என்று ஓ.பி.எஸ் மற்றும் ஈபி.எஸ் ஒத்தை காலில் நின்றும் கடும் நெருக்கடி கொடுத்து கிருஷ்ணசாமிக்கு ஒரு தொகுதியை வாங்கி கொடுத்துள்ளது பா.ஜ.க மேலிடம். இந்த விவகாரத்தில் நெல்லை மாவட்ட அதிமுகவினர் அக்கட்சியின் மேலிடததின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.