பாஜக கூட்டணி எதிராக அதிமுகவில் எழுந்துள்ள குரலால் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள தமிழக பாஜக தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை அதிரடியாகப் பேசி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணியை பற்றி தம்பிதுரை சீண்டுவதை பா.ஜ.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  “பாஜக தமிழகத்தில் காலூன்றவே முடியாது. பாஜவை சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என தம்பிதுரை பேசியதை பாஜக பெரும் அவமதிப்பாகவே கருதுகிறார்கள்.

 

அதோடு போயிருந்தால் பராவாயில்லை, ‘கூட்டணிக்கு பாஜக ஆசைப்படலாம். நாங்களும் விரும்பினால்தான் கூட்டணி அமையும்’ என்று அமைச்சர் ஜெயக்குமாரும் பேசியது வெந்தபுண்ணில் வேல் வாய்ச்சியதாகவே பாஜகவினர் பார்க்கிறார்கள். இதைப் பற்றி தமிழக பாஜகவினரிடம் பேசினால், ‘கூட்டணி பற்றி ஓபிஎஸ் - இபிஎஸ் சொல்லட்டும்’. அவர்கள் சொன்னால் ஒத்துக்கொள்கிறோம்” என்று இதையே பேசிவருகிறார்கள். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே, ‘பா.ஜனதா கூட்டணியில் எந்த கட்சிகள் இருப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்’ எனறு வேறுவழியின்றி நேற்று சற்று காட்டமாகக் கூறினார். 

பொன். ராதாகிருஷ்ணனோ பிற தலைவர்களோ இப்படி பேசினாலும் உள்ளுக்குள் சற்று கலக்கமாகவே இருக்கிறார்கள். பாஜக மேலிடத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட கூட்டணியை அமைக்க முயற்சித்துவருகிறது. திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இது இருக்கும் என்றும் காய் நகர்த்திவருகிறது. ஆனால், அதற்கு மாறாக அதிமுகவில் குரல் எழுவதும், முதல்வரும் துணை முதல்வரும் அமைதி காப்பதும் பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

குறிப்பாக பலமான கூட்டணி அமைந்தால் வெற்றி உறுதி என்று நினைத்த தலைவர்கள் சற்று கலக்கமாகவே இருக்கிறார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. எனவே நாகர்கோயிலில் பொன். ராதாகிருஷ்ணன் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும். வலிமையான கூட்டணி அமையாவிட்டால், நாகர்கோவிலில் சிக்கலாகிவிடும் என்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார். 

இதேபோல கோவை தொகுதியை குறி வைத்து சி.பி. ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் காய் நகர்த்தி வருகிறார்கள். எச். ராஜாவும் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். இவர்கள் எல்லோரும்  பலமான கூட்டணி கணக்கில்தான் இருக்கிறார்கள். பலமான கூட்டணிக்கு சிக்கல் வந்தால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற படபடப்பும் உள்ளது. இருந்தாலும் கூட்டணியைக் கட்சி மேலிடம் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள் தமிழக பாஜகவினர்.