தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி அரசையும் மோடி அரசின் திட்டங்களையும் மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு எந்த மசோதாக்களை கொண்டுவந்தாலும், அதை வாசித்துக்கூட பார்க்காமல் மோடி எதிர்ப்பு அரசியல் செய்வதையும் அறிக்கைகள் விடுவதையும் மு.க. ஸ்டாலின் வழக்கமாக வைத்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் பாஜக கருத்துக்கூற எதுவும் இல்லை. கருத்துக் கூற விரும்பவும் இல்லை. அது அரசியல் நாகரீகமும் கிடையாது.
 தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட்டு அதிமுக தலைவர்களான எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது வரலாற்று உண்மையும் கூட. ஆனால், திமுக தலைவர்கள் தென் மாவட்டங்களில் நின்று வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் மு.க. ஸ்டாலினால் போட்டியிட முடியுமா” என சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.