மேற்கு வங்கத்தைப் பிடித்துகாட்டுவோம் என்று  சொல்கிறார்கள். அது எப்படி நடக்கிறது என்பதையும் பார்த்துவிடுவோம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விட்டுள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்  மாணவர் அமைப்பின் நிறுவன நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பாஜகவையும் மோடி அரசையும் தாக்கி பேசினார். “இந்தியா தற்போது அதிபர் ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தகவலை படித்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனி இந்தியாவில் ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி, ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை வரும்.


பாஜக அரசு அரசியல் கட்சிகளை குறிவைப்பதற்காகவே சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளைப்  பயன்படுத்தி வருகிறது. எனது சகோதரரை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். நாளை என்னையும் அழைக்கலாம். நான் சிறைக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கிறேன். அதே வேளையில் பாஜகவின் இனவாத அரசியலுக்கு கொஞ்சமும் அடிபணிய மாட்டேன். இனவாத அரசியலுக்கு இளைஞர்கள் இரையாகி விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்த 2 ஆண்டுகளுக்கு உங்களின் ஆதரவு எனக்கு தேவைப்படுகிறது.


குதிரைப் பேரம் கர்நாடகாவில் ஆட்சியை பாஜக பிடித்துள்ளது. அடுத்ததாக அவர்களுடைய குறி மேற்கு வங்கம்தான். நாமெல்லாம் அவர்களை எதிர்த்து போராடுகிறோம்; குரல் கொடுக்கிறோம் அல்லவா? அதற்காகவே மேற்கு வங்கத்தைப் பிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள். மேற்கு வங்கத்தைப் பிடித்துகாட்டுவோம் என்று  சொல்கிறார்கள். அது எப்படி நடக்கிறது என்பதையும் பார்த்துவிடுவோம்”  என்று மம்தா பானர்ஜி அதிரடியாகப் பேசினார்.