புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “தற்போது தேர்தலில் முகத்தைப் பார்த்து யாரும் ஓட்டுபோட்டுவிட மாட்டார்கள். தற்போதுள்ள தேர்தல் அதிகார பலத்தையும் பண பலத்தையும் நம்பியே உள்ளது. ஆனால், இதையெல்லாம் கடந்து திமுகவின் தேர்தல் அறிக்கை, ஆள் பலம், கருத்து பலத்தால் நம் கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறும்.
அண்மையில் தமிழகத்துக்கு வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்தனர். அவர்கள் இருவரும் அறிவித்தவுடனேயே திமுக தலையிலான கூட்டணிக்கு வெற்றி உறுதி‌யாகிவிட்டது. தற்போது பாஜக  - அதிமுக கூட்டணி உடைந்து விடும் நிலையில்தான் உள்ளது.
தமிழகத்தில் பாஜக முளைக்கவே முடியாது. பாஜக ஒரு நச்சு செடி. அதை விதைக்கவோ முளைக்கவோ மக்கள் அனுமதி தரமாட்டார்கள். நாட்டில் அனைவரும் அச்சத்தோடு உள்ளார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜக அரசால் மிகவும் அச்சத்தோடு உள்ளார். மத்தியில் தற்போதுள்ள கட்சி அரசியல் கட்சியே அல்ல.  வாஜ்பாய், எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் இல்லாவிட்டாலும் அவர்கள் அரசியல்வாதிகள், ஜனநாயகவாதிகள், ஆனால் தற்போதுள்ளவர்கள் அரசியல்வாதிகளோ, ஜனநாயகவாதிகளோ அல்ல. இவர்கள் முரட்டுதனமான இயந்திரத்தை நடத்திவருகிறார்கள். பாஜகவின் நோக்கமே எதிர்கட்சிகளே இல்லாமல் ஆக்குவதுதான். முக்கியமாக காங்கிரஸ் கட்சியை வேறோடு அழிப்பதுதான்” என ப. சிதம்பரம் தெரிவித்தார்.