மகாராஷ்டிராவில் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸும் பாஜக-வும் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இவ்விரு கட்சி கூட்டணியில் ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.

நேற்றிரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார். இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இன்று காலை மகாராஷ்டிராவில் பாஜக தனது அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்,  தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே,  “கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது,” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.