அடுத்தடுத்து அவர் இரு வழக்குகளில் கைது செய்யப்படுவதால், குண்டாஸ் வழக்கிலும் கைது செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாரிதாஸ் கைதை தமிழக பாஜக மிகத் தீவிரமாக அணுகி வருகிறது.
மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி தமிழக பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவிர வலதுசாரி ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவு செய்தார். இதனையடுத்து இதுதொடர்பான புகாரில் மாரிதாஸை போலீஸார் கைது செய்தனர். மேலும் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட போர்ஜரி வழக்கிலும் சென்னை போலீஸார் கைது செய்தனர். அடுத்தடுத்து அவர் இரு வழக்குகளில் கைது செய்யப்படுவதால், குண்டாஸ் வழக்கிலும் கைது செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாரிதாஸ் கைதை தமிழக பாஜக மிகத் தீவிரமாக அணுகி வருகிறது. இத்தனைக்கும் தான் பாஜகவில் இல்லை என்று சொல்லும் மாரிதாஸூக்காக ஒட்டுமொத்த பாஜகவும் களமிறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், திமுக அரசையும் தமிழக காவல் துறையைக் கண்டித்தும் வாயில் கருப்புத் துணி கட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்பட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். மாரிதாஸ் உள்பட 18 பாஜக ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். 
போராட்டத்தில் திமுக அரசு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார் கூறுகையில், “இது முதல் கட்ட போராட்டம்தான். மாநிலத் தலைவரின் ஆலோசனையோடு அடுத்த கட்ட போராட்டம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.
