மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது எனவும், பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு என்றும் மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த மனு மீதான தீர்ப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அடுத்த ஆண்டு இதை அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால் இந்த ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு மற்றும் அதிமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய்  ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  அதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 55 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில்  இடைக்கால நிவாரணமும் மறுக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும், அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள. இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இத்தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  தெரிவித்துள்ள அவர், 

மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறியுள்ளார்.