சுமார் ஓராண்டிற்கு பிறகு அமித் ஷா சென்னை வர உள்ளது பாஜக தலைவர்களை மட்டும் அல்லாமல் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கும் அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சரும் அப்போதைய பாஜக தலைவருமான அமித் ஷா வந்திருந்தார். அது தான் பாஜக தலைவரான பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியாக அமித் ஷா மேற்கொண்ட முதல் பயணமாகும். அதற்கு முன்னர் பாஜக தலைவராக இருந்த போது தேர்தல் பிரச்சாரங்களுக்கு கூட அமித் ஷா சென்னை பக்கம் வரவில்லை. ஒரு முறை அவர் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கடந்த முறை சென்னை வந்த போது கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அப்போத அந்த ஆலோசனை பெரிய அளவில் எந்த முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அமித் ஷாவின் வருகை துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவிற்கு மேலும் அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்தார். இதனால் அமித் ஷா சென்னையில் நடத்திய ஆலோசனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் இந்த முறை அப்படி இல்லை விரைவில் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டும் பாஜக படுதோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தான் நீடிக்குமா என சந்தேகம் நிலவுகிறது. மேலும் பாஜக – அதிமுக நிர்வாகிகள் இடையே வார்த்தை யுத்தம் வெடித்துள்ளது. உண்மையில் அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகள் போல் இல்லாமல் எதிர் எதிர் முகாமில் இருக்கும் கட்சிகளை போல் செயல்பட்டு வருகின்றன.

இதனால் பாஜக – அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்படப்போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் அமித் ஷா சென்னை வர உள்ளார். பாஜகவை பொறுத்தவரை அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இவற்றில் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களான மேற்கு வங்கம், அருணாச்சல், ஒடிசா மற்றும் கேரளாவில் தனித்தே களம் காண உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. அருணாச்சல் பிரதேசத்திலும் பாஜக வெற்றிக் கொடி நாட்டிவிடும்.

ஆனால் கேரளா மற்றும் தமிழகம் தான் பாஜகவிற்கு மிகப்பெரிய தலைவலி. கேரளாவில் கூட பாஜக நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. எனவே இந்த முறை சட்டமன்றத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் செல்வார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வலுவான கூட்டணி இல்லை என்றால் கடந்த முறையை போன்றே பாஜக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைவதை தவிர வேறு வழியில்லை. இதனால் கூட்டணி வியூகத்தை இறுதி செய்யவே அமித் ஷா சென்னை வர உள்ளதாக கூறுகிறார்கள். சென்னையில் அவர் பாஜக முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக நிர்வாகிகளும் அமித் ஷாவை சந்திப்பார்கள் என்கிறார்கள். ஆனால் அதிமுக நிலைப்பாடு தான் தெளிவாக இல்லை. ஓபிஎஸ் அமித் ஷாவை சென்று சந்திப்பது உறுதி என்கிறார்கள். ஆனால் அதனை அதிமுகவின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள். அதே சமயம் சென்னையில் உள்துறை அமைச்சகம் சார்பிலான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தேசப்பாதுகாப்பு தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தை தன் வசம் வைத்திருக்கும் எடப்பாடி பங்கேற்பார் என்கிறார்கள்.

ஆனால் தனிப்பட்ட முறையில் அமித் ஷாவை சென்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கான வாய்ப்பு உருவாகவில்லை என்று பேசப்படுகிறது. ஒரு வேளை அப்படி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தால் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்பதில் மாற்றம் இருக்காது என்கிறார்கள். எடப்பாடி – அமித் ஷா சந்திப்பு நடைபெறவில்லை என்றால் தமிழக அரசியல் களமே அடுத்த ஆறு மாதத்திற்குள் மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.