கொலுசுன்ற பேருல வெள்ளி முலாம் பூசிய கம்பியை தராங்க... திமுகவை விளாசும் அண்ணாமலை!!
திமுக கொடுத்த கொலுசில் 16 சதவீதம் மட்டுமே வெள்ளி இருப்பதாகவும் வெள்ளி முலாம் பூசிய கம்பி மக்களுக்கு கொலுசு என்று வழங்கிவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக கொடுத்த கொலுசில் 16 சதவீதம் மட்டுமே வெள்ளி இருப்பதாகவும் வெள்ளி முலாம் பூசிய கம்பி மக்களுக்கு கொலுசு என்று வழங்கிவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாலை தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை காளப்பட்டி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தொடங்கினார். பிரசாரத்தின் போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் எதுவும் செய்யாததால் எதுவும் மாறவில்லை. 8 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. முழுமையாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த பின் கோவைக்கு கொரோனா ஊசியை குறைத்தனர். பாஜக சண்டையிட்ட பின்பு ஊசி வழங்கப்பட்டது. கோவை தானாகவே வளர்ந்து வரும் நகரம். மக்கள் தன்மானத்துடன் இருப்பவர்கள்.
திமுக கொடுத்து வரும் கொலுசு, ஹாட்பாக்ஸ், ஆயிரம் பணத்திற்கு மக்கள் தங்களது தன்மானத்தை அடகு வைக்க மாட்டார்கள். திமுக கொடுத்த கொலுசில் 16 சதவீதம் மட்டுமே வெள்ளி உள்ளது. கம்பிக்கு வெள்ளி முலாம் பூசி கொலுசு என்று மக்களுக்கு கொடுக்கிறார்கள். அதேபோல் கிழே போட்டால் 3 துண்டாக போகும் அளவிற்கு தரமற்ற ஹாட்பாக்ஸ் வழங்குகிறார்கள். கோவையில் பாதாள சாக்கடை சரியாக பராமரிக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரிய கட்சியை சேர்ந்த காண்டிராக்டர்கள் 20,30 சதவீதம் கமிஷன் அடிப்பதால் பணிகள் எப்படி தரமாக இருக்கும். இதற்கு ஒரே மாற்று தாமரை வெற்றி பெற வேண்டும். கொரோனாவின்போது அனைவரும் பயந்தோம். 30 கோடி பேர் இறப்பார்கள் என ராகுல் காந்தி சொன்னார்.
மக்களை கொரோனாவில் இருந்து காக்க 122 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு 21 பொருளில் ஒன்று கூட சரியில்லை. வாயில் வைக்க முடியவில்லை. மாநிலத்தின் முதல்-அமைச்சர் வீட்டில் அமர்ந்து கொண்டு வாக்கு சேகரித்து கொண்டு இருக்கின்றார். மைதானத்தில் இறங்காமல் கிரிக்கெட் விளையாடுவதைபோல மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கின்றார். 2.64 கோடி பேர் ஓட்டு போடும் தேர்தலில் மக்களை நேரடியாக சந்திக்க வரவில்லை. இப்போது உங்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள். நீங்கள் ஓட்டு போட்ட பின் அவர்கள் காலில் விழ வேண்டியது இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை எப்படி இருந்ததோ போக்குவரத்து நெரிசல் இல்லாமல், அதே போன்ற கோவையை பா.ஜனதா உருவாக்கும். எனவே கோவையின் மாற்றத்திற்காக பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.