திரையரங்குகளை திறந்த நிலையில் கோயில்களை திறக்காதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  


கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை. இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. திரையரங்குகளை திறந்த நிலையில் கோயில்களை திறக்காதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ’’அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் எப்போதுமே இதுபோன்ற போராட்டங்களை நடத்த தான் செய்யும். இந்த ஆட்சியை எதிர்த்து போராடுவதற்கு போதிய காரணங்கள் எதுவும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும், அவரது தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டு இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்தவர்கள் மகிழ்கிறார்கள். தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்கள், வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்படுகிறார்கள். கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தை தேடி சென்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதுவும் கோவில்கள் திறந்திருக்கும் நாளான இன்று போராட்டம் நடத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.

போராட்டம் நடத்தும் பா.ஜனதா கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இது நாங்கள் எடுத்த முடிவு அல்ல. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தான் இதை செய்கிறோம். எங்கெங்கெல்லாம் கூட்டம் கூடுமோ அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதை கருத்தில் கொண்டு தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் அதிக கூட்டம் கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்துமத கோவில்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மத கோவில்களுக்கும் இந்த கட்டுப்பாடு உள்ளது.

கொரோனா தொற்று குறைந்து பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிலை வரும்போது வாரத்தில் 7 நாட்களும் கோவில்கள் திறக்கப்படும். இதை முதல்வர் தெரிவித்துள்ளார். வணிக வளாகங்கள், பொது இடங்கள், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுகிறது. அவைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளதே என்கிறார்கள். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. அங்கு ஏதாவது பிரச்சனைகள் என்றாலோ, சமூக இடைவெளி கேள்விக்குறியானாலோ காவல்துறை மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் கோவில்களில் அப்படி செய்ய இயலாது. இப்போதும் கோவில்கள் முழுமையாக அடைக்கப்படவில்லை. 3 நாட்கள் தான் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனாலும் அந்த நாட்களிலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் செய்யப்படுகின்றன. எதுவும் தடங்கல் இல்லாமல் முறைப்படி நடந்துகொண்டிருக்கிறது’’என அவர் தெரிவித்தார்.