பாஜகவின் வேல் யாத்திரை மற்றும் கறுப்பர் கூட்டத்தின் வீடியோவை ஒப்பிட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் எழுதியிருந்த தலையங்கம் எடப்பாடி பழனிசாமியை டென்சன் ஆக்கியுள்ளது.

வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி சீனிவாசன் அதிமுகவை மிரட்டும் தொனியில் கூறி இருந்தார். இதற்கு அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் பதில் அளிக்கும் வகையில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அதில் கூறியிருந்தாவது, தியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் அனுமதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனிதத்தை நெறிப் படுத்தவே மதங்களன்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோல் இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.

இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அ.தி.மு.க. அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும். அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி. என்று பாஜகவை பங்கம் செய்து அந்த தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

தலையங்கத்தை குத்தீட்டி என்கிற புனைப்பெயரில் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் தான் எழுதியிருந்தார். இந்த தலையங்கம் வெளியானதும் பாஜகவின் மிகுந்த எரிச்சல் அடைந்துள்ளனர். கறுப்பர் கூட்டத்துடன் காவிக் கூட்டம் என்று கூறி பாஜகவை ஒப்பிட்டிருப்பதை ஏற்கவே முடியாது என்று வானதி சீனிவாசன் மிகவும் கண்டிப்பாக கூறியிருந்தார். அதற்குள் நமது அம்மா நாளிதழின் தலையங்கத்தை முன்னணி தொலைக்காட்சிகள் செய்தியாக்கின. சில தொலைக்காட்சிகள் பாஜகவிற்கு அதிமுக எச்சரிக்கை என்கிற ரீதியில் தலைப்புச் செய்திகளாக ஒளிபரப்பின.

இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தி அடைந்ததாக கூறுகிறார்கள். இபபடி ஒரு தலையங்கத்தை யாரிடம் அனுமதி பெற்று மருது அழகுராஜ் எழுதினார் என்றும் அவர் கொதித்ததாக கூறுகிறார்கள். கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியை இப்படி மிரட்டும் தொனியில் தலையங்கம் எழுத மருது அழகுராஜ் என்ன அதிமுக பொதுச் செயலாளரா என்கிற ரீதியில் கேள்விகள் எழுந்ததாக சொல்கிறார்கள். உடனடியாக முதலமைச்சர் தரப்பில் இருந்து மருது அழகுராஜை அழைத்து கண்டித்ததாகவும் கூறுகிறார்கள். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிஆர்ஓ டீம்கள் தொலைக்காட்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு நமது அம்மா நாளிதழ் தலையங்கத்தை செய்தியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்னர் மருது அழகுராஜ் தினகரன் அணியில் இருந்தார். அப்போதும் இதே போல் பாஜகவிற்கு எதிராக தலையங்கம் எழுதி வில்லங்கத்தை ஏற்படுத்தினார். இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் மருதுஅழகுராஜை அழைத்து கண்டித்தார். இதனை அடுத்தே தினகரனிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வந்திருந்தார். தற்போது தினகரனுக்கு செய்த அதே வில்லங்கத்தை எடப்பாடிக்கும் மருது அழகுராஜ் செய்துள்ளார் என்கிறார்கள். இதனால் என்ன ஆகுமோ? என்கிற பதற்றம் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் நீடிக்கிறது.