தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலில் துவங்கி சட்டமன்ற தேர்தல் வரையில், எந்த தேர்தலாகட்டும், அக்கட்சி தனது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த நொடியில் ‘ஒப்பேறாத பட்டியல்! தோல்வி உறுதி’ என்று வாய் வலிக்க சபிக்கும் நபர்.....யெஸ்! ஸ்டாலினின் அண்ணன் அழகிரியேதான். 

ஒரு காலத்தில் தி.மு.க.வின் முதுகெலும்பாக, தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து, அக்கட்சியை தூக்கி நிறுத்திய அழகிரி அதன் பின்  சொந்த காசிலேயே சூனியம் வைத்துக் கொண்டது போல் பெரும் சிக்கல்களுக்கு ஆளாகி இன்று கட்சிக்கு வெளியில் நிற்கிறார். 

அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் கட்சியை வசைபாடி தீர்க்கிறார் அம்மனிதர். சில நேரங்களில் அவரது சாபம் 40% பலிக்கிறது, பல நேரங்களில் 100% தோற்கிறது. ஆனாலும் விடாமல் தி.மு.க.வை பலிக்கும் வாய்களில் முதல் வாயாக இருக்கிறது அழகிரியின் வாய். 

தி.மு.க.வில் மீண்டும் அழகிரிக்கு இடம் கிடைக்கும், மறுபடியும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆவார்! என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை, ஸ்டாலினும் அவரை மன்னிப்பதாக தெரியவில்லை. 

இந்த நிலையில்தான், அழகிரிக்கு பா.ஜ.க. தூண்டில் போடுகிறது! என்கிறார்கள். சமீபத்தில் பா.ஜ.க.வின் தமிழக முக்கிய தலைகள் சிலர் அழகிரியை தனித்தனியே சந்தித்தனராம். இதில் சிலரின் சந்திப்பை அழகிரியே விருப்பப்பட்டு கேட்டாராம். அப்போது அவர்கள் ‘உங்களின் அரசியல் உழைப்பு, சாணக்கியத்தனமும் அலாதியானது. நீங்கள் ஏன் இப்படி உங்களை வீணாக்கிக் கொள்கிறீர்கள்? தேசிய கட்சிக்கு வரும் எண்ணம் இருக்கிறதா?’ என்று பூடகமாக கேன்வாஸ் செய்துள்ளனர். 

அதற்கு அழகிரியோ ‘காலம் அப்படி செய்யச்சொன்னால் உங்கள் கட்சியில் இணைவது பற்றி யோசிப்பதில் தயக்கமில்லை!’ என்று வெளிப்படையாகவே கருத்தை சொன்னாராம். என்னடா இது நாம மீனுக்கு தூண்டில் போட்டால், மீன் நமக்கு வலையே விரிக்குது!? என்று அசந்து போனார்களாம் அந்தப் புள்ளிகள். 

இந்த தகவல் யாவும் அமித்ஷாவின் கவனத்துக்கு வைக்கப்பட, அவரோ எப்போது, எப்படி அழகிரி பா.ஜ.க.வில் இணைய வேண்டும்! என்று சில ஸ்கெட்ச்களை போடுவார் என்று தெரிகிறது. வெறுமனே ஒற்றை அழகிரியை  மட்டும் இழுப்பதில் அமித்ஷாவுக்கு விருப்பமில்லையாம். தென் மண்டலத்திலிருந்து மிக கணிசமான தி.மு.க.வினர் அழகிரியின் பின்னே பா.ஜ.க.வில் இணைந்து, ஸ்டாலினுக்கு ஹைவோல்டேஜ் ஷாக் கொடுக்க வேண்டும்! என்பதே அவரது விருப்பமாக இருக்கிறதாம். 

அநேகமாக ஆங்கில புத்தாண்டு பிறந்ததும் இது நடக்கலாம்! என்கிறார்கள். ஆக, தை பிறந்தால் அழகிரிக்கு மீண்டும் அரசியல் வழி பிறக்கும் போல தெரிகிறது! என்பதே அவரது ஆதரவாளர்களின்  கொண்டாட்டம். 

ஆனால் அழகிரியிடம் இதுபற்றிக் கேட்டால் ‘நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை. யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.’ என்று வெடுக்கென்று பேசிவிடுகிறாராம். 
அப்படித்தான் ஆரம்பமாகும்!