தமிழகத்தில், கூட்டணியை முடிவு செய்து அறிவிப்பதற்காக, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வர இருந்த நிலையில் அவரது பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மும்பையில் இருந்து டெல்லி கிளம்பி சென்றார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பல கட்டமாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொகுதி எண்ணிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான, பியூஷ் கோயல், 14-ம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் தங்கமணி, வேலுமணியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில், இன்று பா.ஜ.க. தேசிய தலைவர், அமித்ஷா, சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியானது. அதிமுக - பாஜக கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் முடிவு செய்யப்பட்டு விட்டதாவும், அதனை அறிவிப்பதற்காகவே அமித்ஷா சென்னை வரவிருப்பதாகவும் தகவல் வெளியானது. அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் வர உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்த அமித் ஷா தற்போது அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். கூட்டணியில் சில சிக்கல் இருப்பதாலேயே அமித் ஷாவின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.