திருவாரூர் இடைத்தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பு பாய்ச்சல் காட்டி வரும் நிலையில் உள்ளே புகுந்து குறுக்கு சால் ஓட்ட திட்டமிட்டிருக்கிறது பாஜக. அதிமுகவுடன் இணைய மறுக்கும் அமமுகவுக்கு 15 நாட்கள் கெடு விதித்துள்ளதாக வெளியான தகவலால் டி.டி.வி.தினகரன் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்தியிம் மீண்டும் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த தேர்தலில் வீசிய மோடி அலை இப்போது எதிர்ப்பலையாக மாறி வருவதை ஐந்து வடமாநிலத் தேர்தல்கள் நிரூபணமாக்கி விட்டது. இதனால், தென்மாநிலங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது பாஜக. காங்கிரஸ் கரம் வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் முக்கியக் கட்சியான திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது பாஜகவுக்கு பகீர் கிளப்பி வருகிறது. இந்த நிலையில் பாஜக தாமரையை மலர வைக்க வேண்டுமானால், தமிழகத்தில் திமுகவுக்கு இணையாக மற்றொரு கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

ஆளும் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அமமுக செல்வாக்கு பெற்று வரும் நிலையில், இரு கட்சிகளையும் இணைத்து வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றால் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்ட பாஜக அதற்காக பல மூவ்களை செய்து வருகிறது. அமமுகவை சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வனும் அமமுக- அதிமுக இணைவதற்காக பாஜக முயற்சி எடுத்து வருவதாக சில வாரங்களுக்கு முன் வெளிப்படையாகவே கூறியிருந்தார். 

ஆனால், அதிமுகவை சேர்ந்த எடப்பாடி, டி.டி.வி.தினகரனை தவிர மற்றவர்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அமமுகவை சேர்ந்த தினகரனோ, எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை விட்டு நீங்கினால், பார்க்கலாம் எனக் கூறி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பேசிய டி.டி.வி.தினகரன் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைவதற்கு பேசாமல் செத்து விடலாம்’ எனக் கூறி அதிர்ச்சியூட்டினார்.      

ஆனால் இவர்களின் ஆளுக்கொரு போக்கை விரும்பாத பாஜக அணிகளும் இணைய வேண்டியது கட்டாயம் என வலியுறுத்த ஆரம்பித்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களோடு சசிகலாவின் சகோதரர் திவாகரன் அணியையும் ஒன்றிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுன் இணைய மூன்று அணிகளுக்கும் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறதாம் பாஜக.


 
இதற்காக சசிகலாவின் சகோதரர் திவாகரனை பாஜக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர் மூலம் சசிகலாவை தொடர்பு கொண்டு அதிமுக அணிகளை இணைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த முறை 15 நாட்களுக்குள் இணைப்பு முடிய வேண்டும் என பாஜக வட்டாரங்கள் கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 15 நாட்களுக்குள் முடியவில்லை என்றால் சசிகலா மீது புதிய நடவடிக்கைகள் பாயும் எனவும் பாஜகவிடம் இருந்து கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.