சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசு  முயற்சி செய்தது.

ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில்  கடந்த மாதம் அதிகாலையில் கேரளாவைச் சேர்ந்த பிந்து அம்மணி, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள்  போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். 

இதைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது மட்டுமல்லாமல், கனகதுர்கா தன்னுடைய வீட்டிலிருந்தும் எதிர்ப்பை எதிர்கொண்டார். கனகதுர்காவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் மாறிமாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கணவர் வீட்டில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததால், அங்குள்ள அரசு விடுதியில் தங்கியிருந்தார் கனகதுர்கா.

கணவர் வீட்டில் தன்னை அனுமதித்து, குழந்தைகளைப் பராமரிக்க உத்தரவிடக் கோரி பெரிந்தலமன்னா நீதிமன்றத்தில் கனகதுர்கா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கனகதுர்காவின் வீட்டிற்கு அருகில் உள்ள புலாமந்தோல் கிராம நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், கனகதுர்காவை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு அவரது கணவருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டிற்குச் சென்றார்.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான பிந்து, கனக துர்கா ஆகியோர் எந்தமதத்தையும் பின்பற்றலாம் என்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைக்கு எதிராகத் தாங்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

கடைக்குச் சென்றால் எந்த பொருளும் கொடுப்பதில்லை என்று கூறினார். இதையடுத்து வரும் 12 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை தியக்கப்படும்போது இருவரும் சபரிமலைக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்தனர். 12 ஆம் தேதிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் சபரிமலையில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.