சான்றிதழ்கள் கொண்டு வரத்தவறியதால், சென்னை மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தக்க நேரத்தில் உதவி செய்து, அவரை நெகிழ வைத்தார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள எலமேடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி. ஏழை மாணவியான இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மாணவி ரேவதி பங்கேற்றார். அவருக்கு சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

நேர்முகத் தேர்வுக்குச் சென்னை வந்திருந்த ரேவதியிடம் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இல்லை. அடுத்த முறை வருகையில் தகுதிச் சான்றிதழும் சாதிச் சான்றிதழும் சமர்ப்பிப்பதாக ரேவதியின் பெற்றோர் அதிகாரிகளிடம் மன்றாடி கூறினர்.

ஆனால், அதிகாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் ரேவதி தவித்தார்.

ஏழை மாணவியான ரேவதியின் படிப்புக்கு கேரள மாநில முந்திரி உற்பத்தி நிறுவனத் தலைவர் ஜெயமோகன் நிதியுதவி செய்து வந்தார். ரேவதியின் பெற்றோர் அவரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னார்கள்.

உடனடியாக இந்த தகவல் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் 4-ந் தேதிக்குள் மாணவியின் சான்றிதழ்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படும் என்று மாநில உயர் அதிகாரிகள் மூலம் மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு உறுதி அளித்தார்.

இதையடுத்து மாணவி ரேவதி மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். முதல்வர் பினராயி விஜயனின் உடனடி நடவடிக்கையை மாணவியும் அவருடைய பெற்றோரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.