புகார் மனு அளித்த பின் ஏதாவது பேட்ச் வொர்க் செய்துவிட்டு அவர்கள் அதிலிருந்து தப்பிக்ககூடும் என்பதால் சாலையை சென்று நேரில் பார்த்து விட்டு வந்துதான் மனுக் கொடுக்கிறேன் என கூறியிருந்தார். 

கரூர் நெடுஞ்சாலை துறையில் போடாத சாலைக்கு 10 கோடி ரூபாய் பில் போட்டு மூன்று கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கொடுத்த புகாரின் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களை குறிவைத்த அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் ரைடு நடத்துவது, அவர்கள் மீது வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகள் படுஜோராக நடந்து வருகிறது. ஆனால் தங்களை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுகிறது என்றே அதிமுக மாஜி அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதில் மிக முக்கியமானவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தற்போது தன் மீது ஊழல் புகார் குற்றஞ்சாட்டிய திமுக மீதே ஊழல் புகாரை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

அவர் சமீபத்தில் ஆளுநர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகார் மனுவில், திமுக ஆட்சிக்கு வந்தபின் கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 170 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது, அதில் திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மட்டும் 130 கோடி ரூபாய் அளவில் ஒப்பந்தம் பெற்றுள்ளார், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஈசநத்தம் முதல் வீரிய பட்டி, மண்மங்கலம் முதல் நன்னியூர் புதூர் புகழூர் சர்க்கரை ஆலை முதல் சேலம் பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் போடப்பட்டுள்ளன. அங்கு புதிதாக சாலை அமைக்கும் பணியும் அல்லது சீரமைக்கும் பணிகள் தற்போது வரை மேற்கொள்ளவில்லை. அப்படி இருக்க அங்கு போடாத சாலைக்கு 10 கோடி ரூபாய் அளவில் பில் எழுதி அதிகாரிகள் உதவியுடன் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

10 கோடியில் 3கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என அவர் அதில் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான ஆதாரத்துடன் அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்ததுடன், தமிழக ஆளுநர், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் வருவாய் அலுவலர், தமிழக தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் என பல தரப்பினருக்கும் ஒரு புகார் அனுப்பியுள்ளார். 

அதேபோல் இது தொடர்பாக பேட்டி கொடுத்திருந்த அவர், புகார் மனு அளித்த பின் ஏதாவது பேட்ச் வொர்க் செய்துவிட்டு அவர்கள் அதிலிருந்து தப்பிக்ககூடும் என்பதால் சாலையை சென்று நேரில் பார்த்து விட்டு வந்துதான் மனுக் கொடுக்கிறேன் என கூறியிருந்தார். அதேபோல இவ்வளவு பெரிய டெண்டரை எப்படி ஒருவருக்கு மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதே நேரத்தில் புகாருக்கு ஆளான ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் தன் லாரியை எரித்ததோடு லாரியில் இருந்தவர்களை தாக்கியதாகவும் பதிலுக்கு புகார் கொடுத்தார். அதில் தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் அதிமுகவினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்தான், முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகிய 4 பேரையும் நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது எம்.ஆர் விஜயபாஸ்கரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. திமுகவினர் முன்னாள் அமைச்சர்களை மீது குறிவைத்து ஊழல் புகார் கூறி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல் குறித்து புகார் தெரிவித்து, தற்போது அதின் மீதி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.