இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு, கூட்டணி என்பது துண்டு போன்றது. ஆனால், கொள்கை என்பது வேட்டி போன்றது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு. கூட்டணி வேறு  கொள்கை வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம், கொள்ளையை விட்டு கொடுக்க முடியாது. கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது என தெரிவித்தார். 

வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மு.க. ஸ்டாலின் நமது நாட்டின் தலைவர் கிடையாது. அவர் ரஷ்யாவின் தலைவர். முதல்வர் எதை செய்தாலும்  ஸ்டாலின் எதிர்க்கிறார். வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார். எதை செய்தாலும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது.

மேலும், பேசிய அவர் அதிமுக கடல் போல் பெரிய ஆளுமையான கட்சி, கடலில் கொந்தளிப்பு வரும், ஆனால் கடல் அப்படியே தான் இருக்கும். சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது. அதுபோல் அதிமுக பொங்கும் கடல். அதிமுக எந்த காலத்திலும் அழியாது எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.