கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாராம் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி;- பீகார் சமீபத்தில் இரண்டு மகன்களையும் இழந்தது. ராம்விலாஸ் பாஸ்வான் தமது இறுதி மூச்சுவரை தன்னுடன் இருந்தவர். அவர் தமது முழு வாழ்க்கையையும் ஏழை மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்தவர். 

மற்றொருவர் பாபு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கையும் பீகார் இழந்து வாடுகிறது. அவரும் ஏழைகளின் நலனுக்காக மட்டுமே பணியாற்றி வந்தார். இருவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்ககளை பீகார் அரசு சிறப்பாக கையாண்டது. நாட்டுடன் இணைந்து கொரோனா அச்சுறுத்தலை மக்கள் தைரியத்துடன் எதிர் கொண்டனர். பீகாரின் வளர்ச்சிக்கு நிதிஷ்குமார் கடுமையாக உழைத்தார். இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது.

பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன. ஆனால், நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பீகாரில், மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டுப்போட முடிவு செய்துவிட்டனர். இதனால், எந்த வதந்திகளும் வெற்றியை பாதிக்காது. அனைத்து கருத்து கணிப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவிக்கின்றன என்றார். 

மேலும், பேசிய அவர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்கள் போல் செயல்படுகின்றன. இடைத்தரகர்களிடம் இருந்து நாட்டை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாதுகாத்துள்ளது. ஆனால், இந்தியாவை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் இரட்டை என்ஜீன் கொண்டதாக திகழ்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.